வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (02:56 IST)

இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் - டி.வி.சேனல்களுக்கு வேண்டுகோள்

காவிரி பிரச்சனை தொடர்பாக வன்முறை, கலவரம் போன்ற காட்சிகளை நேரடியாகவோ, ஒளிப்பதிவு செய்தோ ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

 
கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் 20ம் தேதி வரை நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்துவதோடு அடித்து நொருக்கி தீ வைக்கும் சம்பவங்களிலும், அங்குள்ள தமிழக மக்கள் சிலர் மீதும் அங்குள்ள அமைப்பினர் ஈடுபட்டனர்.
 
இதேபோல் தமிழகத்திலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
 
அதேபோல, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், இது குறித்து வீடியோக்களை இரு மாநிலத்தை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தன.
 
இந்நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஆத்திரமூட்டும் காட்சிகளை ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு, தொலைக்காட்சி சேனல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
வன்முறை, கலவரம் போன்ற காட்சிகளை நேரடியாகவோ, ஒளிப்பதிவு செய்தோ ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணர்ச்சிமிக்க நேரத்தில் செய்தி அல்லது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டத்தின் வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.