ஜெ. வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டத்தின் முன் தாக்குப் பிடிக்காது - தலைமை வழக்கறிஞர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 30 மே 2015 (19:22 IST)
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாது என்று கர்நாடகா அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் தெரிவித்துள்ளார்.
 
 
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை முடிவில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் முழுமையாக விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
 
இதனையடுத்து ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை கர்நாடக அரசுக்கு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் பரிந்துரை செய்துள்ளார்.
 
தற்போது இது குறித்து பேசிய ரவிவர்மா குமார், “ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால் நீதிக் கேலிக் கூத்தாக்கப்பட்டு விடும்.
 
கர்நாடக நீதித்துறை மீதும், வழக்கை தொடர்ந்த அரசு மீதும் நம்பிக்கை வைத்துதான் இந்த வழக்கின் விசாரணையை கடந்த 2003ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்றும் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :