டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.!!
புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கினார்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கட்சியினர் மத்தியில் கெஜ்ரிவால் அறிவித்தார்.
டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம், அதிஷி வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
டெல்லி துணைநிலை ஆளுநரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஒரே நேரத்தில் சந்தித்து கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.