1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 24 அக்டோபர் 2015 (14:16 IST)

எரித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை முதலமைச்சர் பார்க்காதது அயோக்கியத்தனம் - பிருந்தா காரத்

குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டு இத்தனை மணி நேரம் ஆகியும், முதலமைச்சர் சென்று பார்க்காதது அயோக்கியத்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
 

 
ஹரியான மாநிலத்தில் இரண்டு தலித் குழந்தைகள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரையும், அவர்களது உறவினர்களையும் பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஜிதேந்தரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், “ஏதுமறியா அப்பாவி குழந்தைகள் 2 பேர் கொடூரமாக எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த புகார்களை படித்து பார்க்கக் கூட ஹரியானா பாஜக அரசின் நிர்வாகத்திற்கு நேரமில்லை.
 
இந்த சம்பவம் மட்டுமல்ல, தலித் மக்கள் பாதிக்கப்படுகிற எந்தவொரு சம்பவத்தையும், ஹரியானா அரசு நிர்வாகம் முற்றிலும் அலட்சியப்படுத்துகிறது. பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு நிவாரணம் என்ற பேச்சுக்கே இந்த மாநிலத்தில் இடமில்லை.
 
குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டு இத்தனை மணி நேரம் ஆகியும், முதலமைச்சரோ அல்லது மாநில அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சிந்திக்கக் கூட இல்லை. இது எவ்வளவு அயோக்கியத் தனமானது” என்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.