காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள்.. மக்களவையில் பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்..! எதிர்க்கட்சிகள் அமளி..!
சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு மீட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை அறிக்கையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வெள்ள அறிக்கை குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடும் நெருக்கடியிலும் போராட்டத்திற்கு மத்தியிலும் வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்றார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த காமன்வெல்த் ஊழல்களை உலகமே அறியும் என்றும் நிலக்கரியை காங்கிரஸ் அரசு சாம்பலாக வீணடித்தது என்றும் நிலக்கரி சுரங்கங்களை பாஜக அரசு வைரமாக பட்டைத் தீட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு மீட்டது என நிர்மலா சீதாராமன் கூறினார். மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ள வெள்ளை அறிக்கை தொடர்பான தனது உரைக்கு பதில் சொல்ல எதிர்க்கட்சிகள் தயாரா என கேள்வி எழுப்பினார்.