கேரளாவில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு
கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவலின் தீவிரம் இன்னும் குறையவில்லை. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டுகிறது.
இதனிடையே கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து 5 மாவட்டங்களில் நடக்க இருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு முற்றிலுமாக காலியாகிவிட்டதாக தெரிகிறது. ஆகவே இந்த மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.