1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:00 IST)

காங். காலி பண்ண ராகுல் போதும்; பாஜவுக்கு அவர் ஒரு வரம்!

ராகுல் காந்தி உண்மையில் பாஜகவுக்கு ஒரு ஆசீர்வாதம் என்று பாஜக உறுப்பினரும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேட்டி.


கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
 


தனது கட்சி விலகல் குறித்து சோனியா காந்திக்கு ஆசாத் கட்சி விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பாஜக உறுப்பினரும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இது குறித்து கூறியுள்ளதாவது, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட பல மூத்த தலைவர்கள் வெளியேறிய நிலையில், காந்திகள் மட்டுமே கட்சியில் எஞ்சியிருப்பார்கள்.

ஆசாத்தின் கடிதத்தையும், 2015ல் நான் எழுதிய கடிதத்தையும் படித்தால், நிறைய ஒற்றுமைகள் இருக்கும். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். சோனியா காந்தி கட்சியை கவனித்துக் கொள்ளவில்லை, அவர் தனது மகனை மேம்படுத்த முயற்சிக்கிறார். இது ஒரு வீண் முயற்சி.

இதனால், கட்சிகளுக்கு விசுவாசமானவர்கள், கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். காங்கிரஸுக்கு ஒரு காலம் வரும் என்று நான் கணித்திருந்தேன், அந்த பகுதியில் காந்திகள் மட்டுமே இருக்க வேண்டும், அது நடக்கிறது. ராகுல் காந்தி உண்மையில் பாஜகவுக்கு ஒரு ஆசீர்வாதம் என்று தெரிவித்துள்ளார்.