ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (12:19 IST)

செப்டம்பரில் வருகிறது ரஃபேல் விமானம்: வாங்குவதற்காக செல்கிறார் ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படைக்காக ஒப்பந்தம் போட்டபடி ரஃபேல் விமானங்களை வாங்க அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸில் உள்ள டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது இந்தியா. இதற்காக 62 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவு செய்துள்ளது. இந்த விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு ராணுவ அதிகாரிகள், டஸால்ட் முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்திற்கு புதியது என்பதால் அதை இயக்கி பழக ஏற்கனவே இந்திய விமானப்படை குழு ஒன்று பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதிநவீன ஆயுத தொழில்நுட்பங்களை கொண்ட இந்த ரஃபேல் விமானங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அம்பாலா விமானப்படை தளத்திலும், ஹஸிமரா விமானப்படை தளத்திலும் வைக்கப்பட உள்ளன.