அதிகரிக்கும் கொரோனா: மாநிலங்களுக்கு பறந்த மத்திய சுகாதாரத்துறை கடிதம்!
அதிகரிக்கும் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,05,106 ஆக உயர்ந்தது. புதிதாக 24 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,747 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3791 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,267 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 1,947,642,992 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,31,510 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆதரவை மத்திய அரசு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.