1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (17:23 IST)

புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றம்! – இனி என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

மத்திய அரசு பள்ளி கல்லூரி படிப்புகளுக்கான விதிகளில் மாற்றங்களை கொண்டு வரும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குப்படுத்த புதிய வாரியம் அமைக்கப்படும்.

பிராந்திய மொழி மாணவர்களுக்கு இணைய வழி பாடங்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே தயார் செய்து வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கென பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்படும்.

2030ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்விமுறை பின்பற்றப்படும்.
இதற்காக நாட்டின் மொத்த உற்பத்தில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
புத்தகங்கள் மட்டுமன்றி விளையாட்டுகள், செயல்திறன் பயிற்சிகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.

மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலிருந்து தொழில்பிரிவு கல்விகள் கற்க வாய்ப்புகள் வழங்கப்படும்.

நாடு முழுவதும் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமல்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்களுக்கு ரேங்க் கார்டு வழங்கப்படும்.


பள்ளிகளில் பாதியிலேயே படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு படிப்பை தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதேபோல பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்திருந்தாலும் பிறகு மீண்டும் படிப்பை தொடரலாம்.

மேலும் M.Phil படிப்புகள் புதிய கல்வி கொள்கையில் நிறுத்தப்படுகின்றன.

கல்வியறிவு குறைவாக இருக்கும் பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மெல்ல மெல்ல செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.