வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2016 (03:36 IST)

மத்திய அரசின் நடவடிக்கை சரியே: துக்ளக் சோ

மத்திய அரசின் நடவடிக்கை சரியே: துக்ளக் சோ

பல்கலைக் கழக வளாக அரசியல் சர்ச்சைகள் இந்தியாவிற்கு புதியவை அல்ல என துக்ளக் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.


 

இது குறித்து, தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகர் துக்ளக் சோவை ஆசிரியராக கொண்ட துக்ளக் வார இதழில் வெளியிட்டப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது :-
 
பல்கலைக் கழக வளாக அரசியல் சர்ச்சைகள் இந்தியாவிற்கு புதியவை அல்ல. இப்போது,டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகச் சர்ச்சை, பாராளுமன்றத் தாக்குதலில் தண்டனை பெற்ற அஃப்ஸல் குருவின் நினைவு தினத்தைக் கொண்டாடியதில் துவங்கியிருக்கிறது. கேட்டால், ‘பேச்சுரிமை’ என்கிறார்கள்.
 
இந்தப் பேச்சுரிமை வாதத்தை அரசியல் கட்சிகள் உட்பட அறிவு ஜீவிகள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்று பல தரப்பினரும் முன்வைக்கிறார்கள். இது இந்திய ஜனநாயகத்தின் விநோதம்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கங்கள், பல்கலைக் கழக ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் தங்களது இடதுசாரிச் சார்பை பெருமையாகக் காட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வெறும் இடதுசாரிச் சார்பு என்பது, இப்போது தீவிரவாத இடதுசாரிச் சார்பு என்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
 
2013ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அஃப்ஸல் குருவைத் தியாகியாகச் சித்தரித்து, பல்கலைக் கழக வளாகத்திலும் வெளியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. பல்கலைக் கழகத்தின் மற்றொரு மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.இதனால் ஜனநாயக மாணவர் சங்கம் நடத்த இருந்த கலாசார நிகழ்ச்சியை பல்கலைக் கழக நிர்வாகம் ரத்து செய்து விட்டது.
 
பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவரான கன்ஹையா குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர். மாணவர் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கன்ஹையா குமாரும், சங்கத்திலுள்ள இதர இடதுசாரி நிர்வாகிகளும் எதிர்த்தார்கள். இதையொட்டி நடந்த பேரணியில் அஃப்ஸல் குரு, மெக்பூல் பட் முதலான தீவிரவாதிகளைத் தியாகிகளாகச் சித்தரித்தும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரிவினைக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ‘இந்தியாவை அழிப்போம்; இந்தியாவைத் துண்டாடுவோம்’ என்ற கோஷங்களும் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது.
 
அதே சமயத்தில், இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வக்கீல்கள் வன்முறையில் இறங்கியதும், மாணவர்களைத் தாக்கியதும் கடும் கண்டனத்திற்கும்,சட்டப்படியான நடவடிக்கைக்கும் உரிய செயல்கள். ஆனால், இந்த ஜனநாயக மாணவர் சங்கத்தினர் வரம்பு மீறிச் செயல்படுவது முதல் முறை அல்ல. தண்டேவாடாவில் நக்ஸலைட்கள் சி.ஆர்.பி.எஃப். வீரர்களைக் கொன்றதை இவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நாகாலாந்து, மணிப்பூர் கலகக்காரர் களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
 
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் அமைப்புகள் என்று சந்தேகிக்கப்படும் அமைப்புகளின் பட்டியலில், இந்த ஜனநாயக மாணவர்சங்கமும் இருக்கிறது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2014லேயே கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டது. இந்த மாணவர்சங்கத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்குத் தான் ராஹுல் காந்தி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். பாஜக அரசுக்குச் சங்கடம் தரக்கூடிய எந்தப் பிரச்னையிலும் ஆஜராகி ஆதரவு அளிப்பது என்பது காங்கிரஸின் வாடிக்கையாகி விட்டது.
 
பல்கலைக் கழக வளாகங்களில் தீவிரவாதச் சிந்தனைப் போக்குகள் வளர்வதை, பேச்சுரிமையின் பேரால் வரவேற்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் எல்லா முயற்சிகளையும் வரவேற்க வேண்டும். இதில் மத்திய அரசின் மீது குறை காண்பதற்கு இடமில்லை.