செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (16:49 IST)

ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ கணவரிடம் சிபிஐ திடீர் விசாரணை! மேலும் ஒரு வங்கி மோசடியா?

கடந்த சில மாதங்களாகவே தேசிய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனம் மோசடியாக கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து  வங்கியின் சி.இ.ஓ சந்தா கொச்சாரின் கணவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்யவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வீடியோகான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.3250 கோடி வாங்கியுள்ளது என்றும், இந்த கடனுக்காக ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்திற்கு பணம் மற்றும் பங்குகளையும் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வீடியோகான் தான் வாங்கிய கடனில் இன்னும் ரூ.2800 கோடி திருப்பி செலுத்தாத நிலையில் அந்த கடன் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் வீடியோகான் நிறுவனத்திற்கு இத்தனை கோடி கடன் வழங்கியதில் நிச்சயம் முறைகேடு இருக்கும் என்றும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும்  இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழுவின் தலைவர் அரவிந்த் குப்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.