ராமர் கோவிலுக்கு அருகே வணிகம் செய்ய தடை! – புதிய கட்டுப்பாடுகள்!
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை சுற்றி வர்த்தகம் தொடர்பான விஷயங்களை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் மிக பிரம்மாண்டமான அளவில் ராமர்கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் இந்த பணிகள் முடிந்து கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவிலை சுற்றி கோவிலை மறைக்கும் வகையில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கோவிலை சுற்றி 500 மீட்டர் தொலைவிற்கு எந்தவிதமான வர்த்தகம் தொடர்பான கடைகளோ இன்னபிற விஷயங்களோ செய்ய அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுக்க பக்தர்கள் மத சடங்குகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Edit By Prasanth.K