1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 1 அக்டோபர் 2014 (18:10 IST)

கேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகளுக்கு பாஜகவே காரணம்: உம்மன்சாண்டி பகிரங்கக் குற்றச்சாற்று

கேரள அரசியல் கொலைகளுக்கு பாஜக தான் காரணம் என்று உம்மன்சாண்டி பகிரங்கமாகக் குற்றம்சாற்றியுள்ளார்.
 
கேரள முதல்வர் உம்மன்சாண்டி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''ஜெயலலிதா மீதான தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்குத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம்.
 
இதனால், அரசுக்கு ரூ.7 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். ஆனால், எங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருவாயைவிட மாநில மக்களின் உயிர்தான் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டுதான் துணிச்சலான இந்த முடிவை எடுத்து செயல்படுத்தி வருகிறோம். வருவாய் இழப்பை வேறு துறைகள் மூலம் ஈடு செய்வோம். இதன் மூலம் மாநிலத்தில் சண்டை, சச்சரவுகள் குறைந்து அமைதி ஏற்படும் என்றார்.
 
கேரளாவில் அரசியல் படுகொலைகள் அதிகமாகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளாரே? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ''கேரளாவில் ஒரு சில அரசியல் படுகொலைகள் நடந்தது உண்மைதான். ஆனால், பாரதிய ஜனதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளன.
 
எனவே ராஜ்நாத் சிங், கேரளாவில் உள்ள பாஜகவினருக்கு அறிவுரைகளை கூறி வன்முறையில் ஈடுபடாமல் தடுத்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது" என்றார்.