வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (09:04 IST)

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவா?: பரபரப்பு தகவல்கள்

ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள டெல்லியில், பாஜக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 31 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அகாலிதளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஆனாலும் அந்த கட்சி ஆட்சி அமைக்க விரும்பாததால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) ஆதரவுடன் அரசு அமைத்தது.
 
ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து வெறும் 49 நாளில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரையை ஏற்று, டெல்லியில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இதில் பாஜகவின் 3 எம்.எல்.ஏ.க்களும் (ஹர்சவர்தன், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா) வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளனர். இதனால் தற்போது பாஜக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.
 
மத்தியில் பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து, டெல்லியிலும் அரசு அமைப்பதற்கு அக்கட்சி முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தலைவர் சதீஷ் உபத்யாய், இதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார்.
 
இது தொடர்பாக டெல்லியின் 7 பாஜக எம்.பி.க்களையும் நேற்று முன்தினம் தனித்தனியாக சந்தித்து பேசிய அவர், நேற்று எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் அனைத்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும், டெல்லியில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
 
இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் உபத்யாய், ‘டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். ஆட்சி அமைக்குமாறு எங்களை துணைநிலை ஆளுநர் அழைத்தால், அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்’ என்றார். எனினும் இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் இருந்து திரும்பிய பின் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
 
28 உறுப்பினர்களை கொண்ட பாஜகவுக்கு, அதன் கூட்டணி கட்சியான அகாலிதளத்தின் ஒரு உறுப்பினரையும் சேர்த்து 29 இடங்கள் உள்ளன. தற்போது டெல்லி சட்டமன்ற பலம் 67 இடங்களாக இருப்பதால், பாஜக பெரும்பான்மை பெற மேலும் 5 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
ஆனால் இதை மறுத்துள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங், டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மியுடனோ, மதவாத பாஜகவுடனோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சேராது என்று கூறியுள்ளார்.
 
இதைப்போல டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும், தற்போதைய அரசியல் நிலவரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாஜகவும் கூறியுள்ளது. எனினும் தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறியுள்ள பாஜக, டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
 
அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், மாநில முன்னாள் நிதியமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஜெக்தீஷ் முகி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதற்கிடையே தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மியும் குற்றம்சாற்றியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.