திங்கள், 5 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:52 IST)

நீங்க ஆணுறை கேட்டாலும் குடுக்கணுமா? – பள்ளி மாணவியிடம் மோசமாக பேசிய ஐஏஎஸ் அதிகாரி!

Bihar
பீகாரில் நடைபெற்ற பள்ளி மாணவிகள் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவியை கேவலமாக பேசிய ஐஏஎஸ் பெண் அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது.

பீகாரில் ”சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துதல்” என்ற பெயரில் பள்ளி மாணவிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் நல மேம்பாட்டு செயலரான ஹர்ஜோத் கவுர் பாம்ரா என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பள்ளி மாணவி ஒருவர் “அரசு எங்களுக்கு தேவையான சீருடை உள்ளிட்டவற்றை வழங்குவது போல, அத்தியாவசியமான சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


அதற்கு பதிலளித்து பேசிய ஹர்ஜோத் கவுர் ”நீங்கள் இப்போது நாப்கின் கேட்கிறீர்கள். பின்னர் ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள். அதற்கு பிறகு ஷூ கேட்பீர்கள். பின்னர் ஆணுறையை கூட இலவசமாக கேட்பீர்கள். ஏன் எல்லாம் இலவசமாக கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

பதிலுக்கு பேசிய சிறுமி “மக்கள் ஓட்டு போட்டுதானே அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள்?” என கேட்டுள்ளார். அதற்கு ஹர்ஜோத் கவுர் “நீங்கள் வாக்களிக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு போங்கள். பணத்திற்கும், சேவைக்கும்தானே வாக்களிக்கிறீர்கள்?” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.