பணம் எடுக்க முடியாத நோயாளி மரணம் ; இறுதி சடங்கிற்கு உதவிய வங்கி மேனேஜர்


Murugan| Last Modified புதன், 30 நவம்பர் 2016 (14:06 IST)
தன்னுடைய மருத்துவ செலவிற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் மரணமடைந்த ஒருவரின் இறுதிச்சடங்கை நடத்த வங்கி மேலாளர் உதவிய விவகாரம் தெரிய வந்துள்ளது.

 

 
காசியாபாத் நகரில் வசிக்கும் முன்னேலால் ஷர்மா என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படவே, கடந்த திங்கட் கிழமை, அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். 
 
ஆனால், வங்கியில் போதுமான பணம் இல்லாததால், அவரை நேற்று (செவ்வாய்கிழமை) வருமாறு வங்கி மேலாளர் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, நேற்று காலை அவர் மரணமடைந்தார். 
 
பணம் இல்லாததால், அவரின் இறுதிச்சடங்கை கூட நடத்த முடியாமல் அவரின் குடும்பத்தினர் தவித்தனர். இதையடுத்து, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக, அவரின் 17 வயது பேத்தி வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போதும் வங்கியில் பணம் இல்லை.
 
இதையடுத்து, தனது தாத்தா இறந்து விட்டதையும், இறுதிச்சடங்கு செய்யக்கூட பணம் இல்லை என்பதையும் அந்த பெண், வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதனைக் கேட்டு பரிதாபப்பட்ட மேலாளர், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரூ.10 ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார். மேலும், தன்னுடைய சொந்த பணம் 7 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரம் ரூபாயை, அந்த பெண்ணிடம் கொடுத்து இறுதிச்சடங்கை நடத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
 
வங்கி மேலாளரின் மனித நேயம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :