1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 19 டிசம்பர் 2015 (12:35 IST)

வழிக்கு வராதவர்கள் மீது சிபிஐயை ஏவுகிறது பாஜக அரசு - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனைகள் நடத்துமாறும், மத்திய அரசை எதிர்ப்போரை ஒழித்துக்கட்டுமாறும் சிபிஐ-க்கு வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
புதுடெல்லி அரசின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், ஊழலில் ஈடுபட்டதாக கூறி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரகுமாரின் அலுவலகத்தில் சோதனை செய்கிறோம் என்ற பெயரில் கெஜ்ரிவாலின் அறையிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
 
இதற்கு கெஜ்ரிவால் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். பிரதமர் மோடி, தன்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப் பயந்து, சிபிஐ-யை ஏவி விடுவதாகவும், அவர் ஒரு கோழை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
 
மேலும், தில்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது ரூ. 90 கோடிஅளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வெளிப்படையாகவே குற்றம் சாட்டியது.
 
இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் குறி வைக்குமாறு, சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வழிக்கு வராதவர்களை முடித்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஊழல் செய்யவில்லை என்ற அருண் ஜேட்லியின் மறுப்பை உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், உண்மையில், அவர்மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.