குஜராத்தின் முதல் பெண் முதலமைச்சராகிறார் ஆனந்திபென் பட்டேல்

Anandiben Patel: She Will Be Gujarat's First Woman Chief Minister
Geetha priya| Last Modified புதன், 21 மே 2014 (17:21 IST)
நாட்டின் பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடி அவரது குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், இன்று அவர் அவரது குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத் சட்டசபையில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றப்பிறகு பேசிய மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்பிறகு மாலை சுமார்
3:30 மணிக்கு நரேந்திர மோடி, ஆளுநர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.அதன்பிறகு
எம்.எல்.ஏ பதவியையும்
ராஜினாமா செய்தார்.

பின்னர் குஜராத்தின் புது முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக கட்சியினர் கலந்தாலோசித்தனர். இக்கூட்டத்தில் நரேந்திர மோடியும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது குஜராத் மாநில வருவாய் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 73 வயதான ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன்மூலம், குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் நாளை பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பித்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :