புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (15:39 IST)

அக்னிபத் திட்டம்; பற்றி எரியும் வட மாநிலங்கள்! – இளைஞர்கள் எதிர்ப்பது ஏன்?

agneepath protest
மத்திய அரசின் அக்னிபத் ராணுவ சேவை திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் பலவற்றிலும் இளைஞர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Agneepath

இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 21 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்தபடியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் எதிர்ப்பது ஏன்?

அக்னிபத் திட்டத்திற்கு முன்னதாக ராணுவத்தில் இரண்டு வகையான பணி நியமனங்கள் இருந்து வருகிறது. ஒன்று 8 ஆண்டுகால ராணுவ பணி. இந்த பணியில் இணைபவர்கள் 8 ஆண்டுகள் கழித்து தங்கள் பணி காலத்தை விரும்பினால் மேலும் 6 மாதங்கள் வரை நீடித்துக் கொள்ள முடியும். இதுதவிர நிரந்தர ராணுவ பணி வழங்குவது மற்றொன்று.

இந்தியாவின் வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவ பணியில் சேருவதை அடிப்படையாக கொண்டே தங்கள் பாடங்கள் மற்றும் பயிற்சிகளை அமைத்துக் கொள்கின்றனர்.
Train Burn

பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் 12ம் வகுப்பு முடித்ததுமே ராணுவத்தில் சேர தகுதி பெறுவதற்கான உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ராணுவத்தில் சேர்வது என்பது இவர்களுக்கு நீண்ட கால உழைப்பை கோருவதாக உள்ளது.

அப்படியிருக்க, அனைத்து உடற்தகுதிகளோடும் ராணுவத்தில் இணைந்த பிறகு 4 ஆண்டுகள் மட்டுமே பணி காலம் என்பது ஏற்க முடியாததாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 4 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்து விட்டு ஊர் திரும்பிய பின் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என உத்தர பிரதேசம், பீகார், ஹரியானா என பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பீகார் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் 3 ரயில்களுக்கு தீ வைத்துள்ளனர். தற்போது இந்த போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.