மலையாள சூப்பர் ஸ்டார் மீது நீதிமன்றத்தில் வழக்கு


K.N.vadivel| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (00:56 IST)
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி மீது, நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர்  மம்மூட்டி. இவர் மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
 
இந்த நிலையில், இந்துலேகா ஒயிட் சோப் நிறுவனத்தின் விளம்பரங்களில் மம்முட்டி நடித்தார். அதில், இந்துலேகா சோப்பை பயன்படுத்தினால், வெள்ளை நிறத்துடன், பிரகாசமான அழகை பெறலாம் என்று அந்த விளம்பரம் மூலம் உறுதி கொடுத்தார்.
 
நடிகர் மம்மூட்டி மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக, அந்த சோப்பை வாங்கி சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக  பயன்படுத்தியுள்ளார் கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சத்து என்பவர்.
 
ஆனால், மம்மூட்டி கூறியது போல் வெள்ளையான நிறத்தை பெறவில்லை என்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் மம்மூட்டி மற்றும் இந்துலேகா சோப் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, மம்மூட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் மம்முட்டிக்கு இன்னும் நோட்டீஸ் கிடைக்கவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார்.
 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசராணை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
 


இதில் மேலும் படிக்கவும் :