வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:21 IST)

பாஜக மாநில தலைவர், தெலுங்கானா கவர்னர், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் பாதை

பாஜக மாநில தலைவராக இருந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், குறித்த ஒரு சிறு பார்வை.

ஜூன் 2,1961 ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்திற்கும் கிருஷ்ண குமாரி என்ற பெண்மனிக்கும் மகளாக பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.

இவர் தனது மருத்துவ படிப்பை மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் பயின்றார். பிறகு சென்னை எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைகழகத்தில் Gynaecology (பெண்களுக்கு வரும் நோய்கள்) மற்றும் Obsterics (மகப்பேறு சமயத்தில் வரும் நோய்கள்) ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார். பின்பு மேல் படிப்பிற்காக கனடா சென்றார்.

பல மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய இவர், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றினார். சிறு வயதிலிருந்து அரசியலில் ஆர்வம் கொண்ட தமிழிசை, பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பின்பு பாஜகவில் இணைந்த அவர், 1999 ஆம் ஆண்டு, தென் சென்னையின் மருத்துவ பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு 2001 ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநில மருத்துவ பிரிவின் பொதுச்செயலாளராக பணிபுரிந்தார்.

மேற்கண்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தமிழிசை, 2005 ஆம் ஆண்டு, பாஜகவின் தென் இந்திய கூட்டுறவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பின்பு 2007 ஆம் ஆண்டு, பாஜகவின் மாநில பொதுச்செயலாளரக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு பாஜகவின் மாநில துணை தலைவராக உயர்ந்த அவர், 2013 ஆம் ஆண்டு கட்சியின் தேசிய செயலாளராகவும் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக சார்பாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை 4.70 சதவீத ஓட்டுகளை பெற்றார். பின்பு 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 3.54 சதவீத வாக்குகளை பெற்றார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 4.63 சதவீத வாக்குகளை பெற்றார். பின்பு 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அவர், 21.8 சதவீதம் வாக்குகளை பெற்றார்.

தமிழிசை சௌந்தரராஜன், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்களையும் உருவ கேலிகளையும் மிகவும் துணிச்சலோடு எதிர்கொண்டு வருபவர். பல முன்னணி தொலைக்காட்சிகளில் பல அரசியல் விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர். தனது கருத்துகளை துணிச்சலாக முன்வைக்ககூடிய பெண்மனி என பலராலும் பாராட்டப்பட்டவர். பெண்களின் உரிமைகளை குறித்து பல கருத்துகளை தெரிவித்து வரும் இவர், சமீபத்தில் சினிமாத்துறையில் பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

இவரின் கணவரின் பெயர் டாக்டர் சவுந்தரராஜன். சிறுநீரக நோய் நிபுணரான இவர், இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார்.
தமிழக பாஜக தலைவராக திகழ்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக உயர்ந்துள்ளார். அவருக்கு எம்.பி.கனிமொழி, டிடிவி தினகரன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பாரட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.