வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 16 ஜூன் 2014 (11:44 IST)

நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு அமைதியாக இருக்க முடியாது: நரேந்திர மோடி

பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு அமைதியாக இருக்க முடியாது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்ற நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ட்ஷெரின் டோக்பே விருந்தளித்தார்.
 
இந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு நாட்டின் மகிழ்ச்சிக்கு நல்ல அண்டை நாடு மிகவும் முக்கியம் என்றார். மேலும், ‘நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு அமைதியாகவும், வளமாகவும் இருக்க முடியாது‘ என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
 
அண்டை வீட்டாரை கொண்டே நமது மகிழ்ச்சிக்கான உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால், சில வேளைகளில் வளமும் மகிழ்ச்சியும் கிடைத்த போதிலும், அமைதியாக வாழ முடியாதபடி அண்டை வீட்டார் அமைந்து விடுவதுண்டு.
 
பூடானில் ஒட்டு மொத்த உற்பத்தியை விட ஒட்டு மொத்த மகிழ்ச்சி மேலோங்கி இருப்பதற்கு இந்தியா போன்ற அண்டை நாடு அமைந்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாக கருத வேண்டி உள்ளது. நமது அண்டை நாடுகளினால் நமக்குள்ள ஆதாயம் என்ன? பிரச்சனை என்ன? என்பதை நாம் மிக நன்றாக தெரிந்து வைத்துள்ளதால் நல்ல அண்டை நாடு என்பது மற்றொரு நாட்டின் மகிழ்ச்சிக்கு பெரிய காரணமாகி அதன் வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.
 
நமது 'பாஸ்போர்ட்'களின் நிறம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நமது எண்ணம் ஒன்றுதான். பூடான் நாட்டின் வெற்றியிலும், மகிழ்ச்சியிலும் இந்தியா துணையாக இருந்துள்ளது. இனியும் துணையாக இருக்கும்.
 
இந்தியாவில் ஆட்சிகள் மாறியிருக்கலாம். ஆனால், கலாச்சார பெருமையையும், பாரம்பரிய அமைதியையும் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் இந்தியா- பூடானுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலு பெறச்செய்ய வேண்டியது நமது பொறுப்பாக உள்ளது. குறுகிய எல்லையை கடந்து பரந்துபட்ட எல்லையை நோக்கி செல்ல வேண்டும். என்று அவர் கூறினார்.