வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்துவிட்டு தாய், தங்கையுடன் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Last Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (16:26 IST)
தனது தந்தை தவறானவர் என வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்துவிட்டு தனது தாய் மற்றும் தங்கையுடன், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மானசா என்பவர், தனது தந்தை சித்தாயா, தாய் ராஜேஸ்வரி, மற்றும் தனது தங்கையுடனும் வசித்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் சித்தாயா வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் ”எனது தந்தை, எங்கள் வாழ்வை சிதைத்து விட்டார், எங்கள் மூன்று பேரின் இறப்புக்கு எங்கள் தந்தை தான் காரணம்” என்று 12 ஆம் வகுப்பு மாணவியான மானசா, வாட்ஸ் ஆப்-ல் ஸ்டேடஸ் வைத்துள்ளார். அதனைப் பார்த்த ராஜேஸ்வரியின் சகோதரர் புட்டாசுவாமி, ராஜேஸ்வரியின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்த போது, வீடு உட்புறம் பூட்டியிருந்தது.
இதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற புட்டாசுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே தாயும், 2 மகள்களும் தூக்கில் தொங்கியுள்ளனர். சித்தாயா வெளியில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து புட்டாசுவாமி,

“ராஜேஸ்வரி சித்தாயாவை 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், ஒரு நாள் சித்தாயா வேறு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பின்பு இரு வீட்டாரில் உள்ள பெரியவர்கள் தலையிட சித்தாயா இனி அந்த பெண்ணிடம் உறவு வைத்து கொள்ளமாட்டேன் என உறுதியளித்தார். பிறகு மீண்டும் குடும்பமாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் அதன் பிறகு அடிக்கடி, இருவருக்கும் தகராறு வந்துள்ளது” என கூறியுள்ளார்.

தாய் மற்றும் 2 மகள்கள் தூக்கி மாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :