1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 10 செப்டம்பர் 2014 (19:26 IST)

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்திலிருந்து 76,500 பேர் மீட்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தினர் இதுவரை 76,500 பேர்களை மீட்டுள்ளனர்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஓடும் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
குறிப்பாக ஜீலம் நதியின் வெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. மேலும், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
 
இந்த கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 200 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளின் கூரைகளிலும், மேல்மாடிகளிலும் ஏறி நின்று தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள்.
 
இவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
 
இராணுவத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், போதுமான மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
 
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் எல்லை சாலை போக்குவரத்து அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.