1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (16:14 IST)

பிரதமருக்கு கடிதம் எழுதி இதய அறுவை சிகிச்சைக்கு உதவி பெற்ற சிறுமி

மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் வைஷாலி யாதவ்( வயது 6). பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டை இருந்ததால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தார். வைஷாலியின் தந்தை கூலி வேலை செய்துவருவதால் மகளின் மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவதியுற்றார்.



இந்நிலையில் பிரதமர் மோடியின் நலத்திட்ட உதவிகளை தொலைக்காட்சிகளில் கண்ட அவர் தனக்கும் உதவி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தனது விபரங்களை பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் வைஷாலிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து புனே மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு வந்தது. மேலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து புனே மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினர்.

இதையடுத்து அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் வைஷாலிக்கு கடந்த 4-ம் தேதி இதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கும் இலவச ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது உடல்நிலை தேறிவரும் வைஷாலி நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.