1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 ஜூன் 2015 (18:33 IST)

பெண் சிசுவைக் கலைத்து நாய்க்கு போட்ட தம்பதிக்கு 6 ஆண்டுகள் சிறை

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்பதை அறிய ஸ்கேன் செய்து பெண் சிசுவைக் கலைத்த தம்பதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில், பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என ‘ஸ்கேன்’ மூலம் சோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் இது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் அனைத்து ஸ்கேன் செண்டர்களிலும் மகப்பேறு மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவத்துறையில் பணிபுரியும் தம்பதியான சுதம் முண்டே, சரஸ்வதி ஆகியோர் தங்களது மருத்துவமனையில் கடந்த 2010ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு இது போன்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என சோதனை நடத்தினர்.
 
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கருவில் இருப்பது பெண் சிசு என கண்டுபிடித்ததுடன் கருவை கலைத்து அதை நாய்க்கு உணவாக போட்டிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறையிடம் புகார் அளித்தது.
 
இதையடுத்து மருத்துவ தம்பதி மீது பீட் மாவட்டம் பார்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மருத்துவ தம்பதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த சட்டம் அமலுக்கு வந்தபிறகு முதல் முறையாக தண்டனை பெறும் மருத்துவ தம்பதி இவர்கள் என்று தொண்டு நிறுவன அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.