செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (19:16 IST)

3வது கட்டத் தேர்தல்: டெல்லி உட்பட 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைக்கான 3வது கட்ட தேர்தல் நடைபெறும் தலைநகர் டெல்லியில் வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியின் 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கிறார்கள்.
Lok sabha election 3rd phase
முதலில் வாக்குப்பதிவு மந்தமாக துவங்கினாலும், நேரம் போக போக வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளார்கள். மேலும் வாக்குச் சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், கட்சித் தலைவர்களும் வாக்குகளை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல் ஆகியோர் அதே வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள். மேலும் தலைவர்கள் ஹர்ஷவர்தன், கபில் சிபில் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மக்களவை தேர்தலில் 3 ஆம் கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய தலைவர்களின் வெற்றி, தோல்வி முடிவு செய்யப்படுகிறது. மக்களவைக்கு ஏப்ரல் 7 முதல் மே 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதியும், மேகாலயா, அருணாச்சல பிரதேசங்களில் உள்ள தலா 2 தொகுதிகள், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிகளுக்கு நேற்றும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 3 ஆம் கட்டமாக டெல்லி, மகாராஷ்டிரா, காஷ்மீர், சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தர பிரதேசம், கேரளா, பீகார், மத்திய பிரதேசம், அரியானா, ஒடிசா உட்பட 11 மாநிலங்கள், சண்டிகர், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Lok sabha election Delhi
இதில், ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. இன்று தேர்தலை சந்திக்கும் 1,418 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை 11 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மதக்கலவரம் நடைபெற்ற பதற்றம் மிகுந்த முசாபர்நகர், சஹரன்பூர், கைரானா, அலிகார், பிஜ்னார், மீரட், பக்பத், காஜியாபாத், கவுதம்புத்தா நகர், புலந்த்சாகர் ஆகிய 10 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
 
பக்பத்தில் ராஷ்டிரிய லோக்தள் தலைவரும், மத்திய அமைச்சருமான அஜித் சிங்கும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்கும் போட்டியிடுகின்றனர். ராஷ்டிரிய லோக்தள் கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா (பிஜ்னார்), நடிகர் ராஜ் பாப்பர் (காஜியாபாத்), நடிகை நக்மா (மீரட்) ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும் களம் காண்கின்றனர். காஜியாபாத்தில் பாஜக சார்பில் ராஜ் பாப்பரை எதிர்த்து முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் போட்டியிடுகிறார். டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.