செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (19:14 IST)

இரண்டே பேர் உள்ள கிராமம்! அங்கு ஒரு வாக்குச்சாவடி!

அருணாசலபிரதேச மாநிலத்தில் உள்ள 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 49 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடந்தது.
 
அன்ஜா மாவட்டத்தில் சீன எல்லையையொட்டி அமைந்த மலோகயான் கிராமம் அமைந்து உள்ளது.
 
இந்த கிராமத்தில் ஜோகெலும் தாயெங், அவரது மனைவி சோகேலா என இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர். எனினும், இந்த கிராமத்தில் ஓட்டுப் பதிவுக்காக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. 
 
இதற்காக திடிங் என்னும் கிராமத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மலோகயானுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
 
இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சந்திர பூஷன் குமார் கூறுகையில், ‘மலோகயானில் வாக்குப்பதிவு செய்வதற்காக போலீஸ்காரர்கள் உள்பட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 10 பேரும், 10 சுமையாளர்களும் வாக்குபதிவு எந்திரங்களை எடுத்துக் கொண்டு இந்த கிராமத்திற்கு நடந்தே சென்றனர். 
 
இவர்கள் வழியில் இருந்த பல சிறிய நீரோடைகளையும், கரடு முரடான மலைப்பாதைகளையும், அடர்ந்த காடுகளையும் கடந்து 4 மணி நேரத்திற்கு பிறகு மலோகயான் சென்றடைந்தனர்’ என்றார்