ஏன் தங்கல் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? - ஒரு பார்வை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 31 டிசம்பர் 2016 (04:20 IST)
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” - இது பாரதியார் அவர்களின் கவிதை வரிகள். இந்த வரிகளுக்கு நிகரான ஒரு திரைப்படம்தான் தங்கல்.

ஆமிர்கானுடன் படத்தில் உள்ளவர்கள்தான் நிஜ கதாபாத்திரங்கள்!

”தங்கல் [யுத்தம்]” - அற்புதமான திரைப்படத்தை தந்திருக்கிறது ஆமிர்கான், நிதேஷ் திவாரி, கிரன் ராவ், சித்தார்த் ராய் கபூர் கூட்டணி.

சமுதாயக் கட்டுமானங்களால் அனுதினம் ஒடுக்கப்பட்டுக்கொண்டு, தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டு வாழும் எதார்த்த பெண்களின் உலகத்தை உடைக்க முற்படும் ஒரு அசாதரண தந்தையும், அவரது மகள்களின் வாழ்க்கையுமே இந்த ‘யுத்தம்’.

#சல்யூட்கள்...

+ ஆண்கள் மட்டும்தான் மல்யுத்தம் போன்ற உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற பிரக்ஞையை உடைத்ததற்காக.

+ பெண் என்றால் அவர்களுக்கு உரிய இயல்பான நளினத்துடன், அழகுடன், அழகுப் பொருட்களை பூசிக் கொண்டும்,  மென்மையுடன் தான் வாழ வேண்டும் என்ற அருவருப்பான கண்ணோட்டத்தை மாற்றியமைத்தமைக்காக.

+ 4 பெண் குழந்தைகளை பெற்றிருந்தாலும் ஒரு லட்சிய தந்தை இப்படி வாழ்ந்துகாட்ட முடியும் என்று திமிர்த்தனமாக வைராக்கியத்துடன் நின்றமைக்காக.

+ ஆர்வமும், லட்சியமுமுள்ள பெண் குழந்தைகளைக் கூட இந்த சமுதாயம் எப்படி கிண்டலுக்கு உள்ளாக்குகிறது என பட்டவர்த்தனமாக விமர்சித்தமைக்காக.

+ குத்துப் பாட்டு, பழைய காதல் கசமுசாக்கள், பறந்து பறந்து கார்களை மோதவிட்டு, கண்ணாடிகளால் நம் கண்களை குத்தாமல் வணிக சமாச்சாரங்களுக்கு [குறைந்தபட்ச மட்டுமே] அதிகளவிற்கு இடமளிக்காமல் இருந்தமைக்காக.

+ உண்மையிலேயே இதே போன்று மகள்களைப் பெற்றெடுத்த பெருமை சேர்த்த மகாவீர் சிங் போகாட் மற்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள் கீதா, பபீதா ஆகியோருக்கு.

+ ஏக்கம், கனவு, விரக்தி, பெருமிதம், செருக்கு, அழுகை என படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார் ஆமிர் கான். பெண்களும் அதி அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

+ லகான், மங்கள் பாண்டே, ஃபனா, தாரே ஜமின் பர், 3 இடியட்ஸ், பீப்ளி லைவ், பீகே, தங்கல் என சமூக எதார்த்த நிலைகளை கேள்விக்கு உள்ளாக்கி வரும் நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல் பரிமாணங்களைக் கொண்டிருக்கும் ஆமிர்கான் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது.

நிச்சயமாக இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பெண் குழந்தைகளைப் பெற்ற பொற்றோர்களுக்கு ஒரு உந்துசக்தியைக் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த திரைப்படத்தை ஒற்றை வரிகளில் சொல்ல வேண்டுமெனில், ”ஆண்களே! பெண்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும், உயர்வுக்கும் மரியாதை செலுத்துங்கள்.. பெண்களே! தடைகளை உடைக்கும் உளிகளை கையில் எப்போதும் வைத்திருக்க தயங்காதீர்கள்”.


இதில் மேலும் படிக்கவும் :