வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 11 நவம்பர் 2015 (11:23 IST)

விமர்சனம் - தூங்கா வனம்

கமலின் இன்னொரு துணிச்சலான முயற்சி தூங்கா வனம். நகைச்சுவை இல்லை, காதல் இல்லை, டூயட் இல்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில்  கச்சிதமான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்கிறது படம்.


 
 
போதை மருந்து கடத்தும் கும்பல், அவர்களுக்கு உதவி செய்யும் சில ஊழல் போலீஸ் அதிகாரிகள், அந்த ஊழல் பேர்வழிகளை கண்டுபிடிக்க முயலும் ஒரு போலீஸ் அதிகாரி, இந்த பூனை - எலி விளையாட்டை அறியாமல் ஆட்டத்தை கலைக்கும் பெண் போலீஸ்.... இதுதான் தூங்கா வனத்தின் கதையும் களமும். கையடக்கமான ஏரியா... அதிலும் கத்தியை லாவகமாக சுற்றியிருக்கிறது கமல் அண்ட் டீம்.
 
ஊழல் போலீஸாக அறிமுகமாகி நல்ல போலீஸாக டுவிஸ்ட் அடிக்கும் கம்பீரமான கதாபாத்திரம் கமலுக்கு. வில்லன்களிடம் கம்பீரத்தை காண்பிக்கும் அதே நேரம் மகனிடம் பாசத்தை காட்டி நெகிழ வைக்கிறார். சண்டைக் காட்சிகளில் இவருக்கா 61 வயது என்று அசர வைக்கும் சுறுசுறுப்பு. காலம் தந்த சுருக்கங்கள் அடிக்கடி திரையில் பளிச்சிட்டாலும், தனது கம்பீர நடிப்பால் திவாகர் கதாபாத்திரத்துக்கு திராவகத்தின் அடர்த்தி சேர்க்கிறார்.
 
கமல் மறைத்து வைக்கும் கொகேய்னை அவருக்கு தெரியாமல் எடுத்து கதையை நகர்த்தும் மைய கதாபாத்திரம் த்ரிஷாவுக்கு. கமலுடன் சரிக்கு சமமாக மோதும் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

உட்கார்ந்த இடத்திலிருந்து கமலுக்கு பிபி வரவழைக்கும் பிரகாஷ்ராஜ் பல இடங்களில் கமலையே ஓவர்டேக் செய்வது அழகு. அந்த நக்கலும் நையாண்டியும் பிரகாஷ்ராஜுக்கே உரித்தானவை. கிஷோர் த்ரிஷாவுடன் இணைந்ததும் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது. சம்பத்துக்குதான் சின்ன வேடம். யூகி சேது கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு.


 

 
 
ப்ரெஞ்சில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட்டை அனுமதி வாங்கி அப்படியே எடுத்திருக்கிறார்கள். கமலுக்கு அடுத்தபடி தூங்கா வனத்தின் கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸும், எடிட்டர் ஷான் மொகமத்தும். திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னணி இசை அதற்கேற்ப ஒத்திசைந்து வருகிறது.
 
கமல் தொடங்கி அனைவருமே பெரிய நடிகர்கள். முதல் படத்தில் இவர்களை வைத்து வேலை வாங்கியது இயக்குனருக்கு பெரும் சவால். அதனை சாமர்த்தியமாக சமாளித்திருக்கிறார். லொட லொட ஜெகனைக்கூட அளவாக பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை.
 
எந்த ஜானர் படமாக இருந்தாலும் அதில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் சேர்த்து பரிமாறுவதே தமிழ் சினிமாவின் ஸ்டைல். அந்த கதம்ப சாப்பாட்டுக்கு பழகியவர்களுக்கு தூங்கா வனம் திருப்தியளிக்காமல் போகலாம். அது நமது ரசனை குறைவே அன்றி படத்தின் குறையல்ல.
 
ஆக்ஷன் த்ரில்லர் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தூங்கா வனம் மிகச்சரியான தேர்வாக இருக்கும்.