ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (14:31 IST)

சிகரம் தொடு - திரை விமர்சனம்

காவல் துறைப் பணியை வெறுக்கும் ஒருவர், அதே பணியில் சேர்ந்து சிறந்த காவலர் விருதினைப் பெறுவதே இந்தப் படத்தின் கதை. இதில் ஏ.டி.எம். கொள்ளையைச் சற்றே நுணுக்கமாக அலசியதன் மூலம், வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர்.
 
நேர்மையான காவலராகப் பணியாற்றி, பணியின்போது ஒரு காலை இழந்த போலீஸ்காரராகச் சத்யராஜ். அவர் மகன் முரளி பாண்டியனாக விக்ரம் பிரபு. காவல் துறையில் தன்னால் சாதிக்க இயலாததைத் தன் மகன் மூலம் சாதிக்கும் கனவில் சத்யராஜ் இருக்கிறார். ஆனால், இந்த வேலையால் தானே அப்பாவுக்குக் கால் போச்சு என்று, மகன் அந்தப் பணியை வெறுக்கிறார். வங்கிப் பணியில் சேரவும் முயல்கிறார். ஆனால், அதை அப்பாவிடம் சொன்னால், அவர் மனம் உடைந்துவிடுவார் என்பதால், அவர் முன் காவல் பணிக்குத் தயார் ஆவது போல் நடிக்கிறார்.
 
இந்நிலையில் வட மாநிலப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் அவரின் தாத்தாவுடன் விக்ரம் பிரபு துணைக்குச் செல்கிறார். அந்த முதியோர் குழுவில் வரும் கோவை சரளாவுக்குத் துணையாக வரும் அவர் மகள் அம்புஜமாக மோனல் கஜ்ஜார். விக்ரம் பிரபுவும் மோனலும் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர, வானில் களேபரமாக அரங்கேறுகிறது முதல் முத்தம். இந்த மோதல் பின்னர் காதலாக மாறுவது, தனி அத்தியாயம். மோனலுக்கும் போலீஸ் வேலை பிடிக்காது என்பதால், காதல் வேகமாக வளர்கிறது.

 
யாத்திரை முடிந்து வரும்போது, விக்ரம் பிரபுவுக்குக் காவல் துறைப் பணிக்கான பயிற்சியில் சேர, அழைப்பு வருகிறது. மோனலிடம் பொய் சொல்லிவிட்டு, அப்பாவுக்காக விக்ரம் பயிற்சியில் சேர்கிறார். ஆனால், பயிற்சி அளிப்பவரின் மகளே மோனல் தான் எனத் தெரிய வருகிறது. பயிற்சியில் சரிவரச் செய்யாமல் வெளியேறப் போவதாக, விக்ரம் தன் திட்டத்தைச் சொல்கிறார். ஆனால், பயிற்சி நிறுவனத்தின் முதல்வரான மோனலின் அப்பா, சத்யராஜின் நண்பர். இந்தப் பயிற்சியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, வேலையில் சேர்ந்து ஒரு மாதம் வேலை செய். அதன் பிறகு இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லை என்றால், பதவி விலக உனக்கு உதவுகிறேன். என் மகளையும் உனக்குத் திருமணம் முடிக்கிறேன் என்கிறார். அவரது யோசனையை ஏற்று விக்ரம் பிரபு, காவல் துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்கிறார்.
 
வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய கணக்கு விவரங்களைத் திருடி, போலி டெபிட் அட்டைகளைத் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் குழுவினர், சென்னையின் பல இடங்களிலும் கைவரிசை காட்டி வருகின்றார்கள். இவர்களைத் தற்செயலாகக் காணும் சத்யராஜ், அவர்களுடன் சண்டையிட்டுப் பிடித்துக் கொடுக்கிறார். அவர்கள் விக்ரம் பிரபு பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய விக்ரம், மோனலிடம் ஒப்புக்கொண்டபடி திரைப்படம் பார்க்கச் செல்கிறார். அந்த நேரத்தில் காவலில் இருந்த குற்றவாளிகள் இருவரும் தப்பிச் செல்லப் பார்க்கிறார்கள். மகனைத் தேடி அங்கே வந்த சத்யராஜ், அவர்களுடன் போராட, அவரைச் சுட்டுவிட்டு இருவரும் தப்பிக்கிறார்கள்.
 
அதுவரை காவல் துறைப் பணியில் ஒட்டாமல் இருந்த விக்ரம், அதன் பிறகு தீவிரமாகக் களம் இறங்குகிறார். குற்றவாளிகளை அவர் பிடித்தாரா? சுடப்பட்ட சத்யராஜ் பிழைத்தாரா? போலீஸான விக்ரம் பிரபுவை மோனல் ஏற்றாரா என்பது மீதிக் கதை.
 
மேலும்

"என் மகன், நான் சொல்வதைக் கேட்பான்" எனப் பெருமைப்படும் அப்பாவாகவும் கடமை தவறாத காவலராகவும் சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார். ஒரு காலை இழந்த பிறகும் அவர் நம்பிக்கையையும் கொள்கைகளையும் கைவிடாமல் இருப்பது சிறப்பு. ஆனால், அவரை நொண்டி ஹீரோவாகப் பார்க்கும் விக்ரம் பிரபு, தன் தந்தையை ஏமாற்றுவதும் காதலிக்காகக் கடமையில் தவறுவதும் அவரது மதிப்பைக் குறைக்கின்றன. பிற்பாதியில் தான் அவர் கதாநாயகனாக முகம் காட்டுகிறார். குற்றவாளிகளை அவர் துப்பறியும் விதம் நன்று. 

 
நாயகி மோனல் கஜ்ஜார், வட்ட முகத்துடன் வசீகரிக்கிறார். கடமையை விடக் காதலியே முக்கியம் என விக்ரம், படத்துக்கு வரும்போதும், திரையரங்கில் அவரது செல்பேசியை மோனல் அணைத்து வைக்கும்போதும் காதலின் மீதே வெறுப்பு வருகிறது. போலீஸ் வேலையை மோனல் வெறுப்பதற்கு இன்னும் வலுவான காரணம் காட்டியிருக்கலாம். 
 
காவல் நிலையத்திலிருந்து விக்ரம் பிரபுவின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து, சத்யராஜைச் சுட்டுவிட்டுக் கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். துப்பாக்கியைப் பறி கொடுத்ததற்கும் காவலில் இருந்த கைதிகளைத் தப்பவிட்டதற்கும் விக்ரம் பிரபுவின் மீது துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யராஜைக் கொல்ல நெருங்கிய கைதி, அவரைக் கொல்லாமல் சென்றது ஏன்? இறுதிக் கட்டக் காட்சிகளில் தன் கூட்டாளியை விக்ரம் பிரபு அடித்து நொறுக்க, அவர் மீது காரை ஏற்றிக் கொல்ல ஏடிஎம் கொள்ளையர் முயல்கிறார். பின் இருக்கையில் இருக்கும் மோனல் கழுத்தில் கத்தியை வைத்திருந்தாலே போதுமே, விக்ரம் பிரபு விலகியிருப்பாரே?
 
ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மரையும் மைக்ரோ கேமராவையும் வைத்து ரகசிய விவரங்களைத் திருடுவதாகப் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால், அவற்றை வைக்கும்போது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அடுத்த நாள், பணம் எடுப்பது போல் சென்று அவற்றை மீண்டும் எடுத்துவிடுவதாகக் காட்டுகிறார்கள். அந்தக் காட்சிகள், மேலே உள்ள வீடியோவில் பதிவாகாதா? உள்ளிட்ட சில கேள்விகள் எழுகின்றன.
 
ஏடிஎம் காவலாளிகள் உறங்குகிறார்கள், எனவே அவர்களைச் சாய்ப்பது எளிதாக இருக்கிறது. ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்து ஒருவர் கேமராவை மூடி மறைக்கிறார் என்றால், அவர்கள் பணத்தை எடுப்பதற்கு முன்பே அந்த ஏடிஎம் எந்திரத்தைச் செயலிழக்கச் செய்ய முடியாதா? இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தானாகவே தகவல் பறக்க வேண்டாமா? வங்கியும் காவல் துறையும் இந்தச் சூழ்நிலைகளில் அதிவிரைவாகச் செயல்பட வேண்டாமா? இதற்கெல்லாம் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கையில், ஏடிஎம் கொள்ளையின் ஒரு பகுதியை மட்டும் இயக்குநர் காட்டியிருக்கிறார். மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும்போது, கேமராவை மறுமுனையில் பார்ப்பவர், என்ன செய்வார் என்பதையும் காட்டியிருக்க வேண்டும். ஏடிஎம் மையங்களின் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.

வாடிக்கையாளரின் 16 இலக்க எண்ணும் ரகசிய பின் எண்ணும் கிடைத்தால், அதைக் கொண்டு ஏடிஎம் மையத்திலிருந்துதான் திருட வேண்டும் என்பதில்லை. இணையத்தின் வாயிலாகவும் பல வகைகளில் திருடலாம் என்பது வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு நன்றாகத் தெரியுமே. ஆனால், அந்தக் கோணங்களில் இந்தப் படம் ஒரு துளியும் பயணிக்கவில்லை.
 
அதே நேரம் ஏடிஎம் கொள்ளையை மட்டுமின்றி, ஹரித்வார் சாமியாரின் சீட்டு மோசடி, கூட்டம் கூட்டிப் பர்சுகளைத் திருடுவது உள்ளிட்ட வேறு சிலவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது. படத்தின் இயக்குநராகக் கவர்ந்ததை விடவும், ஏடிஎம் கொள்ளையரில் ஒருவராக நடித்ததன் மூலம் இயக்குநர் கௌரவ், அதிகம் கவர்கிறார்.
 
விக்ரம் பிரபுவின் நண்பராக வரும் கேகே, அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். இவர் நடத்தும் ஜிம்மில் சேரும் இளம் பெண்களுக்கு இவரே கட்டணம் செலுத்துகிறார். இந்தப் பெண்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் பெரிசுகள் இவரிடம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த உத்தியை உண்மையிலேயே வேறு யாராவது பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
 
இமானின் இசையில் சில பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசை, படத்திற்குப் பெரிய அளவில் துணை புரிந்துள்ளது. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு அருமை. 
 
காவல் துறையில் சேர்வதும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதும் ஒரு தொடக்க நிலைதான். முதல் படியையே சிகரம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பொறுப்புணர்ந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் சிகரம் தொடலாம்.