பூஜை - திரை விமர்சனம்

poojai
தி.ந.ச.வெங்கட ரங்கன்| Last Updated: திங்கள், 27 அக்டோபர் 2014 (12:57 IST)
சென்னை தேவி திரையரங்கில் “பூஜை” பார்க்கப் போனேன், அரங்கம் நிரம்பிய கூட்டம். விஷால் ரசிகர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று எண்ணினேன், ஆனால் கைக் குழந்தையோடு, பாட்டி, தாத்தாவோடு என்று பெரிய குடும்பங்களே வந்து இருந்தார்கள். இதுவே படம் கமர்ஷியலாக வெற்றி என்று காட்டியது.

 
எடுத்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கூலிப் படை வைத்துத் தீர்த்துக் கட்டும் காட்சியோடு படம் ஆரம்பிக்கிறது. அவரின் வண்டியை நிறுத்த, விபத்தில் அடிபட்டு, ரத்தம் ஒழுக வீழ்ந்து கிடப்பது போல் போலியாக செட் செய்கிறார்கள் - இதெல்லாம் ஜென்டில்மேனிலேயே பார்த்துட்டோம் என்று தோன்றுகிறது நமக்கு! 
 
அடுத்து கூகுள் மேப் வருகிறது, அது ஜூம்மாகி கோவை, காந்தி நகர், காய்கறி மார்கேட்டில் செல்ல, மாறுகிறது காட்சி. இதுவரை வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் கெட்டவர்கள், அவர்களிடம் இருந்து காப்பாற்றப் பிறந்தவர் தான் கதாநாயகன் என்றே வந்த தமிழ் சினிமா மரபில் இருந்து மாறி, வட்டிக்குப் பணம் கொடுப்பவராக வருகிறார் விஷால். தொழில் விரோதம் காரணமாக இவரை அடிக்க வரும் ரௌடிகளை அசத்தலாக அடித்து நொறுக்குகிறார் விஷால். உடனே என்ன?  டாஸ்மார்க்கும், அறைகுறை அடையோடு வரும் காய்கறி விற்கும் பெண்ணோடு ஒரு கூத்தாட்டம் தான்.  காரணத்தோடு(!) தான் குடிப்பேன் என்று தத்துவம் பேசி, குடித்துவிட்டு ஆண்ட்ரியாவோடு ஒரு ஆட்டம் போடுகிறார். அவர் காரணத்தோடு குடித்தால் என்ன, மோடா குடிகாராக இருந்தாலும் நமக்கு என்ன, அழகாக வந்து போகும் ஆண்ட்ரியாவால் நமக்குப் பைசா வசூல்.
 
அடுத்து என்ன? பணக்கார நாயகியின் அறிமுகம் தான். இலக்கணம் பிசகாமல் அதுவும் நடக்கிறது, கோவையின் பெரிய மால் ஒன்றில். அதற்குப் பிறகு விஷால் தன் காதலைச் சொல்ல, உனக்கு என்னைக் காதலிக்க என்ன தகுதி இருக்கிறது என்று சுருதிஹாசன் வேடிக்கிறார். அதற்கு விஷாலின் நண்பனாக வரும் பரோட்டா சூரி, அவர்யார் தெரியுமா என்று ஆரம்பிக்கிறார் - கோவையிலேயே பெரிய பணக்காரக் குடும்பத்து மூத்த மகன் தான் விஷால், குடும்ப கௌரவத்திற்காக செய்யாத குற்றத்தின் பழியைச் சுமந்து, தாய் ராதிகாவால் (இதை நாம் போன காட்சியிலேயே ஊகித்துவிட்டோம் என்பது வேறு) வீட்டைவிட்டு அனுப்பப்பட்டவர் என்று முடிக்கிறார். அடுத்து  சுருதி கேட்டதற்காக, காதலனோடு ஓடிப் போன தோழியைக் கண்டுபிடித்து உதவுகிறார் விஷால், உடனே காதலிக்கத் (இப்போது பணக்காரர் என்பதால்!) தொடங்கிறார் சுருதி. உடனே ஐரோப்பாவில் ஒரு குளுகுளு பாட்டு - எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றவில்லை சுருதி, நமக்கு, கண்ணா இன்னொரு லட்டு சாப்பிட்ட திருப்தி.

 
இதற்கு நடிவில் போலீஸாக வரும் சத்யராஜையும் அவரின் மனைவியாக வரும் ஐஷ்வர்யாவையும் வில்லன் கொல்ல முயல, அவர்களைக் காப்பாற்றுகிறார் விஷால். பின் சத்யராஜ், விஷாலுக்குப் பெரிய விதத்தில் உதவுவார் என்று நாம் எதிர்பார்த்தால், கமிஷனர் ஆபிசில் பைலை மட்டும் பார்க்கிறார், நிறைய போலீஸோடு ஒரிரு முறை வந்து அடக்கி வாசித்து இருக்கிறார் சத்யராஜ். இது முழுக்க முழுக்க விஷால் படம் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் இயக்குநர் என்பது தெளிவு.  சத்யராஜின் மிரட்டலான தோற்றத்தை எதிர்பார்த்த என் போன்றவர்களுக்கு இது ஏமாற்றம். ஆனால் அதையெல்லாம் சேர்த்துச் செய்து, இளைஞர்களுக்கு அடிதடி விருந்து தந்துள்ளார் விஷால்.
 
விஷால் குடும்பத்துச் சொந்த ஊர் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார், வில்லன் அன்னதண்டவமாக வரும் முகேஷ் திவாரி. இதைத் தடுக்க கோவில் அறங்காவலராக விஷாலின் சித்தப்பா ஜெயப்பிரகாஷை ஊர்ப் பெரியவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். கையொப்பம் இட வரும் போது அவரை அடித்து அவமானப்படுத்துகிறான் வில்லனின் அடியாள். அவமானத்தைப் பொறுக்க முடியாமல், ஊரே அழுகிறது. உடனே தாய் ராதிகா விஷாலை மன்னித்துத் திரும்ப அழைக்க, தனியாளாக அவர் வில்லன் அடியாளின் கையை உடைக்கிறார், எல்லோரையும் துவம்சம் செய்கிறார். பின் என்ன? வில்லன் பழிதீர்க்கச் சபதம் எடுக்க, ராதிகாவை வில்லன் கொல்ல, பிஹார் தப்பி சென்ற வில்லனை விஷால் துரத்திக் கொல்ல, நாமே அடிவாங்கிய களைப்போடு வெளிவருகிறோம். 
 
இசை யுவன் சங்கர் ராஜாவாம், எந்தப் பாடலிலும் அவரைக் காணோம். அது போல் காமெடி டிராக்கில் வரும் பிளாக் பாண்டி, சூரி, இமான் இவர்களின் ஜோக்கிற்கு திரையில் உள்ளவர்கள் மட்டுமே சிரிக்கிறார்கள்.
 
மொத்தத்தில் இயக்குநர்  ஹரி தனது வெற்றிப் பாதையிலிருந்து சற்றும் மாறாமல், இன்னொரு ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்துள்ளார். அதை மட்டும் எதிர்பார்த்து வரும் விஷாலின் ரசிகர்களுக்கு இது போதும்; இதற்கு மேல் எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் தான்.

இந்தப் படத்துக்கு நமது மதிப்பெண் 1.5 / 5

பூஜை படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

http://bit.ly/Poojai-Tixஇதில் மேலும் படிக்கவும் :