வியாழன், 30 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2016 (13:53 IST)

மிருதன் - விமர்சனம்

மிருதன் - விமர்சனம்

மிருதன் - விமர்சனம்
ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு சோம்பிகள் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரண்டு வருடங்கள் முன்பு வெளியான பிராட் பிட்டின் வேர்ல்ட் வார் ஸீ ஒரு அருமையான சோம்பி திரைப்படம்.


 


உலகம் முழுவதும் படம் பட்டையை கிளப்பியது. என்லும், பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு சோம்பிகள் புதுசு. 
 
இப்படியொரு முயற்சியை மேற்கொண்டதற்காக சக்தி சௌந்தர்ராஜனுக்கு பாராட்டுகள். இந்த அறிமுக பாராட்டே போதும் என்று அவர் நினைத்திருப்பதுதான் மிருதனின் பலவீனம்.
 
கெமிக்கல் ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து கெமிக்கல் வெளியே கொட்டிவிடுகிறது. அதனை ஒரு நாய் குடிக்க, கெமிக்கல் காரணமாக வெறி பிடிக்கும் அந்நாய் ஒருவரை கடித்துவிடுகிறது. அவர் இன்னொருவரை கடிக்க... இப்படியே கெமிக்கலின் கடுமையான வைரஸ் அந்த பிரதேசத்தையே சோம்பிகளாக்கிவிடுகிறது. தமிழின் புது முயற்சியான சோம்பிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை காண்பிக்கும் இந்த ஆரம்பக் காட்சி படத்தில் 
மேலும் எதிர்பார்க்க வைக்கிறது.
 
சோம்பி பிரச்சனைக்கு தீர்வுகாண முயலும் மருத்துவர் குழுவுக்கு போக்குவரத்துத்துறை எஸ்.ஐ.யான ஜெயம் ரவி உதவுகிறார். மருத்துவர் குழுவில்தான் அவர் காதலிக்கும் லட்சுமி மேனனும் இருக்கிறார். ..
 
மேலும் அடுத்தப்பக்கம் பார்க்க...

மருத்துவர்குழு சோம்பிகளை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்ததா? ஜெயம் ரவி தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இந்த கேள்விகளுக்கு ஏராளமான சோம்பிகளையும், துப்பாக்கி குண்டுகளையும் செலவளித்து பதிலளிக்கிறது படம்.
 
சோம்பி என்பது கிட்டத்தட்ட ஒரு பேய் படம். பேய் எங்கிருந்து எப்படி தாக்கும் என்ற திகில்தான் பேய் படங்களின் ஆதாரம். சோம்பிகளுக்கும் இது பொருந்தும். மிருதனில் அந்த த்ரில் குறைவு. சோம்பிகள் வரிசையாக ஜெயம் ரவியிடம் வந்து அவரது துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகின்றன. இரண்டாம் பாதி முழுக்க இந்த டமால் டுமீல் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. 

மிருதன் - விமர்சனம்

 

 
அண்ணன், தங்கை சென்டிமெண்ட், வருங்கால கணவருக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகி என்ற வழக்கமான சினிமா சென்டிமெண்ட் மிருதனில் வொர்க் அவுட் ஆகவில்லை. ஜெயம் ரவியின் தங்கையாக வரும் அனிகாவும், லட்சுமி மேனனும் நன்றாக நடித்திருந்தும் எடுபடாமல் போகிறது.
 
அவ்வப்போது கிச்சு கிச்சு காட்டுகிறார் எம்பியாக வரும் மனோகர்.  சோம்பிகளை கட்சி தொண்டர்களாக அவர் நினைக்குமிடம் வெடிச்சிரிப்பு. காளி வெங்கட் சிலநேரம் ஜாலி வெங்கட்டாக நம்மை சிரிக்க வைக்கிறார். பின்னணி இசையில் மற்றப் படங்களைவிட அதிகம் இமான் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இரண்டு பாடல்களும் ஓகே. ஆனால், இது போன்ற ஒரு படத்துக்கு தேவையா இத்தனை பாடல்கள்? சோம்பிகள் தண்ணீருக்குப் பயப்படும் என்ற கிளைமாக்ஸ் டுவிஸ்டை இன்னும் சிரத்தையோடு பிரமாண்டப்படுத்தியிருக்கலாம்.
 
பாய்ந்து வரும் சோம்பிகளையும், சூழலின் பதட்டத்தையும் தனது கேமராவில் கொண்டுவர முயன்றிருக்கிறார் வெங்கடேஷ். படத்தின் வண்ணங்கள் சோம்பி கதைக்கு நன்றாக பொருந்திப் போகிறது.
 
பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க், பில்டிங் வீக் என்ற வடிவேலின் வசனத்துக்கு உதாரணமாகவே இப்போது படங்கள் வருகின்றன. முதலில் ஜில் ஜங் ஜக். இப்போது மிருதன்.
 
சோம்பி கதையை எடுத்த இயக்குனர், திரைக்கதையில் சோம்பாமல் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.