செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (05:52 IST)

மதுர வீரன்: திரைவிமர்சனம்

சகாப்தம் என்ற படுதோல்வி படத்திற்கு பின்னர் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த இரண்டாவது படம் 'மதுர வீரன்'. இந்த படம் அவருக்கு தேறுமா? என்பதை தற்போது பார்ப்போம்

ஊருக்கு நல்லது செய்யும் பெரிய மனுஷன் சமுத்திரக்கனிக்கு சொந்த ஊரிலேயே பலர் பகையாகின்றனர். குறிப்பாக ஜாதி பேதமில்லாமல் ஜல்லிக்கட்டில் யார் வேண்டுமானாலும் காளையை அடக்கலாம் என சமுத்திரக்கனி அறிவித்தது அவரது சொந்த ஜாதி தலைவர்களுக்கு ஆத்திரத்தை அளிக்கின்றது. இந்த நிலையில் சமுத்திரக்கனி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

கணவர் இறந்தவுடன் சிறுவயது சண்முகப்பாண்டியை அழைத்து கொண்டு தம்பியுடன் மலேசியாவுக்கு செல்கிறார் அவரது மனைவி. பின்னர் சில வருடங்கள் கழித்து மலேசியாவில் எஞ்சினியராக பணிபுரியும் சண்முகப்பாண்டியனை அவரது தாயார், பெண் பார்க்க சொந்த கிராமத்திற்கு அழைத்து வருகிறார். வந்த இடத்தில் தனது தந்தை சிறுவயதில் கொலை செய்து சிறையில் உள்ளவர் உண்மையில் கொலையாளி இல்லை என்பதை தெரிந்து கொண்டு உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டால் உயிரை இழந்த தனது தந்தையின் நினைவாக பத்து வருடங்களுக்கும் மேல் நடத்த முடியாத ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்கிறார். அதற்கு ஊரில் உள்ள இரண்டு சாதியினர் இடைஞ்சல் கொடுக்கின்றனர். இந்த நிலையில் தான தந்தையை கொலை செய்தவர் யார் என்று சண்முகப்பாண்டியனுக்கு தெரிகிறது. இருந்தும் ஜல்லிக்கட்டு முடியும் வரை அமைதி காக்கின்றார். ஜல்லிக்கட்டு நடந்ததா? தந்தையை கொன்றவரை பழி வாங்கினாரா? என்பது தான் மீதிக்கதை

முதல் படத்திற்கு இந்த படத்திற்கும் சண்முகப்பாண்டியன் நடிப்பில் பெரும் வித்தியாசம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த ஆவேசமாக முடிவெடுப்பது, ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் செய்பவர்களிடம் சவால் விடுவது, மற்றும் ஆக்சன் காட்சிகளில் இளவயது விஜயகாந்தை பிரதிபலிப்பது என படம் முழுவதும் சண்முகப்பாண்டியனின் நடிப்பு சூப்பர்

சண்முகப்பாண்டியனின் காதலியாக வரும் மீனாட்சிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் ஹோம்லி லுக்குடன் உள்ளதால் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உள்ளது.

சமுத்திரக்கனி சிறிது நேரமே திரையில் தோன்றினாலும், அந்த கம்பீரம் அவரது நடிப்பில் மிளிர்கிறது. இயற்கை விவசாயம், ஜாதி மோதல்கள் இல்லாமல் மனிதனாக வாழ்வது, ஜல்லிக்கட்டின் பெருமை என அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் கைத்தட்டலை பெறுகிறது.

இரண்டு ஜாதிக்கட்சி தலைவர்களாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மைம்கோபி ஆகியோர் நடிப்பு ஓகே. பாலசரவணன் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றது.

ஒளிப்பதிவாளரே இயக்குனர் என்பதால் மண்ணின் மனம் கொஞ்சம் கூட மாறாமல் படம் இயல்பாக உள்ளது. பிஜி முத்தையாவுக்கு பாராட்டுக்கள். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. முழுக்க முழுக்க படம் முழுவதும் ஜல்லிக்கட்டு குறித்தே பேசுவதால் ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டின் பெருமையை சொல்ல எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள்

மொத்ததில் 'மதுர வீரன்' மகிழ்ச்சியை கொடுக்கும் வீரன் தான்

ரேட்டிங்: 3.5/5