திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (20:04 IST)

ரஜினி படமா..ரஞ்சித் படமா..? - ரசிகர்களை ஏமாற்றிய காலா

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

 
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே காலா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரஜினி படங்களை முதல் நாள் முதல் காட்சி காணத்துடிக்கும் ரசிகர்கள் வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு தியேட்டர்களில் குவிந்து இப்படத்தை கண்டு களித்தனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் காலா படம் பிடித்ததா என்பது முக்கியமான கேள்வி.
 
ரஜினியை வைத்து ஏற்கனவே கபாலி படம் கொடுத்தவர் ரஞ்சித். அவரின் மெட்ராஸ் மற்றும் கபாலி படங்களில் மறைமுக மற்றும் நேரிடையான அரசியல் இருக்கும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். காலா படமும் அதே கதைக்களத்தை கொண்டுதான் அமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

 
ஆனாலும், ரஜினி படம் என்கிற பிம்பத்தில் அதை மறந்து தியேட்டருக்கு சென்றனர் ரசிகர்கள். ஆனால், திரையில் அவர்கள் ரஜினியை விட ரஞ்சித்தையே அதிகம் உணர்ந்ததாக சொல்கிறார்கள். வழக்கமான ரஜினி படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களை இப்படம் திருப்திபடுத்தவில்லை என பலரும் கூறுகின்றனர்.
 
தாராவியின் காவலன் ரஜினி. இவரை மீறி தாராவியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு. இந்த நிலையில் தாராவியின் மொத்த இடத்தையும் தனது அதிகாரத்தால் பறிக்க நினைக்கின்றார் அதிகாரமிக்க நானா படேகர். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

 
இந்த ஒன்லைனிலேயே இது முழுக்க ரஞ்சித் திரைப்படம் என்பது நமக்கு புரிந்துவிடுகிறது. இடையில் காதல், குடும்பம், சண்டை என காட்டி இறுதியியில் தான் சொல்ல வந்த கருத்தை ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார். ஆமாம்! ஒரு திரைப்படம் என்பது இயக்குனரின் படைப்புதான். அவரின் கருத்தைதான் படம் பேசும் என்பது சரிதான். ஆனால், இது ரஜினிக்கு பொருந்துமா? 
 
ரஜினி நடித்த திரைப்படத்திற்கு  ‘இது ரஜினி படம்’ என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் ரசிகர்கள் செல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கே.எஸ்.ரவிக்குமார் (லிங்கா தவிர), ஷங்கர் ஆகியோர் ரஜினியை வைத்து இயக்கிய படங்களில் ரஜினியிடம் அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

 
தன்னுடைய சித்தாந்தத்தை, அரசியலை, தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் நில உரிமை பிரச்சனைகளை காலா ரஞ்சித் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், ரஜினி ரசிகர்களை மனதில் கொண்டு அவருக்கான காதல் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், அதிரடி சண்டைக் காட்சிகளை படத்தில் வைத்து சமசரசம் செய்திருக்கிறார். 
 
அதிலும், அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினியிடம் அது தொடர்பான பஞ்ச் வசனங்களை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு இரண்டு, மூன்று காட்சிகளை தவிர இப்படம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. கபாலி படத்திலும் இதுதான் நடந்தது. அப்படம் ரஜினி படமாக இல்லாமல் ரஞ்சித் படமாகவே இருந்தது. அதனால்தான், அப்படத்தை பற்றி கேட்டால் கருத்து கூற முடியாமல் ரசிகர்கள் முழித்தார்கள்.


 
அதிலும், காலா படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ரஜினி செய்யும் புரட்சிகளிலேயே படம் செல்வது அலுப்பை ஏற்படுத்துகிறது. அதனால்தான், திரைப்படத்தை பார்த்து விட்டு வெளிவரும் பல ரசிகர்கள் படம் ஆவரேஜ், சுமார், எதிர்ப்பார்த்தது போல் இல்லை, மொக்கை, ஒரு தடவ பாக்கலாம் எனவே கூறுகின்றனர். 
 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரஜினியை முழுமையாக நேசிக்கும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு ஒருவேளை இப்படம் பிடிக்கலாம்.
 
ஆனால், வழக்கமான ரஜினி படத்தை பார்க்க செல்லும் ரசிகனுக்கு இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகம்தான்...