1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (19:22 IST)

ஆடாம ஜெயிச்சோமடா - திரை விமர்சனம்

இது, கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்து எடுத்துள்ள ஒரு குற்ற நாடகம் (கிரைம் டிராமா). கிரிக்கெட்டில் ஆடி ஜெயிக்கிறவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவர்களைப் பின்னாலிருந்து இயக்குவதன் மூலம் ஆடாமல் ஜெயிக்கும் சூதாட்டக்காரர்கள் பற்றிய படம். 
 
டாக்சி டிரைவர் கருணாகரன் ஓட்டும் காரில் கிரிக்கெட் புக்கி பாலாஜி பயணிக்கிறார். சிறிய முட்டல், மோதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இந்த நேரத்தில், புக்கி பாலாஜி அவரது ஓட்டல் அறையில் கத்தியால் குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கிறார். அவரைப் பார்க்கச் சென்ற கருணாகரன் மீது கொலைப் பழி விழுகிறது. அதே நேரம், புக்கி பாலாஜி, அடுத்து நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்க, அது குறித்தும் காவல் துறையினர் துப்பறிகின்றனர். 
 
இதற்கிடையே கருணாகரன், தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் விஜயலட்சுமியைக் காதலிக்கிறார். அதை ஏற்கும் விஜி, உன் வீட்டில் தனிக் கழிவறை இருந்தால், உன்னைக் கல்யாணம் கட்டிக்குவேன் என ஒரு நிபந்தனை விதிக்கிறார். அன்று வரையில் அவர் பொதுக் கழிவறையைப் பயன்படுத்தி வந்ததால் பட்ட இன்னல்களை இயக்குநர் ஓரிரு காட்சிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார். தனிக் கழிவறை இருக்கிறது என்றவுடன் திருமணத்துக்குச் சம்மதித்த விஜி,  கருணாகரனுடன் இரண்டு டூயட்டும் பாடியிருக்கிறார்.

 
புக்கி பாலாஜியைக் கொன்றது யார்? என்ன காரணம்? அவர் பின்னுள்ள சூதாட்டத் தரகர் யார்? இதற்குப் பின்னுள்ள வலைப் பின்னலில் யார் யார் இருக்கிறார்கள்? 
 
புக்கி பாலாஜியின் சூதாட்டத்துக்கு உடந்தையாக உள்ள பந்து வீச்சாளர் யார்?  அவர் எந்த ஓவரில் எவ்வளவு ரன்கள் விட்டுத் தருவார்? அதற்கு அவர் காட்டும் சைகை என்ன? 
 
இந்த இரண்டு கேள்விக் கொத்துகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். அதில் காவல் துறை ஆணையராகக் கே.எஸ்.ரவிகுமார், ஆய்வாளராக சிம்ஹா, உதவி ஆய்வாளராகச் சேத்தன் ஆகியோர் விசாரணைகளுக்கு நடுவே, அவ்வப்போது ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் மீதிக் கதை.
 
செல்பேசி வழியாகக் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து விடுகிறார்கள். எனவே, ஒரே இடத்தில் நிற்காமல் ஓடும் காரில் செல்லில் பேசுவதும் அந்தப் பேச்சு, ஓட்டுநரின் காதில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக அவரை இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கச் சொல்வதும் நல்ல காய் நகர்த்தல்கள். கிரிக்கெட் வீரர்களை மயக்க, சூதாட்டத் தரகர்கள், பலான பெண்களைப் பயன்படுத்துவதைப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
மேலும்
 

நகைச்சுவை நடிப்பில் திறமை காட்டிய கருணாகரன், இந்தப் படத்தில் கதாநாயகனாகப் பரிமளித்திருக்கிறார். அவருடைய முட்டைக் கண்களும் அப்பாவித்தனமான நடிப்பும் இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. பாடல் காட்சிகளில் அவர் இன்னும் துடிப்பாக நடித்திருக்கலாம்.
 
விஜயலட்சுமிக்குச் சென்னை பாஷை இயல்பாக இல்லை என்றாலும் இயன்ற அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். தனிக் கழிவறை வேண்டும் எனக் கேட்பது, அவரது ஒற்றைக் குரல் இல்லை. இந்தியாவில் உள்ள கோடானு கோடி பெண்களின் கோரிக்கை. அதை வெட்கப்படாமல் திரையில் காட்டியதன் மூலம், அவர் இந்தத் தேவையை உலகறியச் செய்திருக்கிறார். அதற்காக அவரையும் இயக்குநர் பத்ரியையும் பாராட்டலாம்.

 
சாமுத்ரிகா லட்சணம் பற்றிய ராதா ரவியின் கண்ணோட்டமும் படத்துக்குள் படமாக வரும் சூறாவளி திரைப்படமும் நல்ல நகைச்சுவை. நாம் பொறுமையாகக் காத்திருந்தால் குற்றவாளி தானாகவே வந்து நம்மிடம் மாட்டிக்கொள்வான் என்ற போலீஸ் சிம்ஹாவின் நம்பிக்கையும் சிரிக்க வைக்கும். இடையில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதிகள் தமிழ் பேசுவது பற்றிய கிண்டலும் இந்தப் படத்தில் உண்டு. 
 
சியன் ரோல்டனின் பின்னணி இசை கலக்கல். துவாரகநாத்தின் ஒளிப்பதிவு தெளிவு. செயற்கையான சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் இப்போ உச்சா போறேன், சொய்ங், சொய்ங் எனக் கருணாகரனின் நண்பர் சொல்வது, ரசக் குறைவாய் உள்ளது.
 
இவ்வளவு கண்காணிப்புக்கு இடையிலும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் இதிலிருந்து மக்கள் விழிப்புணர்வு பெற்று, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருந்தால், அதுவே வெற்றிதான்.
 
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடி ஜெயிக்கும்.

ஆடாம ஜெயிச்சோமடா - படங்கள் | ட்ரெ‌ய்ல‌ர்!