செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (13:11 IST)

A1 திரைவிமர்சனம்

சந்தானம் நடித்த A1 திரைப்படத்திற்கு ஒரு சில எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
அய்யர் பெண் தாரா அலிஷா ஒரு வீரமான வேகமான ஐயர் பையனை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக அவர் வைக்கும் ஒரு டெஸ்டில் தற்செயலாக சந்தானம் வந்து சிக்குகிறார். சந்தானத்தின் நடை உடை பாவனை மற்றும் நெற்றியில் உள்ள அடையாளங்களை வைத்து அவர் ஒரு ஐயர் பையன் என நினைத்து அவரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானம் ஐயர் பையன் இல்லை என்றும் அவர் ஒரு லோக்கல் பையன் என்று தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த நாயகி, சந்தானத்தின் காதலை முறித்துக்கொள்கிறார். பின்னர் மீண்டும் சந்தானத்தின் ஒரு உதவியால் அவர் மீது நாயகிக்கு காதல் வருகிறது. ஆனால் இந்த முறை சந்தானம் காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கின்றார். தந்தையை மீறி தன்னால் சந்தானத்தை காதலிக்க முடியாது என்று கூறி மீண்டும் பிரேக் அப் செய்யும் தாரா அலிஷா, சந்தானத்திற்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். தனது தந்தை மிகவும் நல்லவர் என்றும் அவரது மனதை புண்படுத்தி விட்டு தன்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்றும் ஒருவேளை தனது தந்தை கெட்டவர் என்று நிரூபித்துவிட்டால் நான் உன்னுடன் வர தயார் என்றும் கூறுகிறார். ஊரே நல்லவர் என்று கூறும் அவரை எப்படி கெட்டவர் என நிரூபிக்க முடியும் என்று அதிர்ச்சி அடைந்த சந்தானம் நண்பர்களுடன் சேர்ந்து போதையில் தனது காதலியின் தந்தையைக் கொலை செய்தால்தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்று கூறுகிறார். ஆனால் மறுநாள் காலை சந்தானம் காதலியின் தந்தை கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? அந்த கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது என்ன? நாயகியின் தந்தையின் பின்னணி என்ன?  இவைகள் தான் இந்த படத்தின் மீதிக்கதை 
 
ஒரு முழுநேர நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார் சந்தானம். பல திரைப்படங்களில் பகுதிநேர காமெடி நடிகராக இருந்த சந்தனம், ஹீரோவாகிய பிறகு முழுநேர காமெடி நடிகராக மாறி உள்ளார். காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆனாலும் அவர் காமெடியை மட்டும் விடவில்லை. ஆக்க்ஷன் மற்றும் செண்டிமென்ட் காட்சிகளை தவிர்த்து, முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு சந்தானம் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதால் படத்தை ரசிக்க முடிகிறது. சந்தானத்தின் எனர்ஜி ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மாதிரி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்
 
நாயகி  தாரா அலிஷா,ஐயர் பெண் கேரக்டருக்கு சரியான பொருத்தம். காமெடி மற்றும் ரொமான்ஸ் நடிப்பில் இவர் தேறி உள்ளதால் தாராஅலிஷாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது. சந்தானம் கூடவே வரும் மூன்று நண்பர்கள் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். தொடர்ச்சியாக பேசும் காமெடி டயலாக்குகள், பாடி லாங்குவேஜ் பட்டையை கிளப்புகிறது அதேபோல் எம்.எஸ்.பாஸ்கர், சாய்குமார், மீரா கிருஷ்ணன் உட்பட மற்ற நட்சத்திரங்களும் தங்களுடைய கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
 
சந்தோஷ் நாராயணன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. குறிப்பாக 'மாலை நேரம்' என்ற பாடலை கம்போஸ் செய்த விதம் மற்றும் படமாக்கப்பட்ட விதம் அருமை. இந்த படத்தை ஜான்சன் என்பவர் இயக்கியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார். படத்தின் கதையில் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளால் படத்தை நகர்த்துயுள்ளதால் அந்த மிஸ்டேக்கை நாம் மறந்து விடலாம். 
 
மொத்தத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை விழுந்து விழுந்து சிரிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட படம் தான் இந்த A1. சந்தானம் மற்றும் படக்குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்