மறக்க முடியுமா - Knife in the Water

ஜே.பி.ஆர்| Last Modified வெள்ளி, 9 டிசம்பர் 2016 (13:13 IST)
போலந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி முதலில் இயக்கிய திரைப்படம், நைஃப் இன் தி வாட்டர். அவரது புகழ்பெற்ற திரைப்படமாக இந்தப் படம் இன்றும் விளங்குகிறது.

 
நைஃப் இன் தி வாட்டர் படத்தை ஒரு விஷுவல் பியூட்டி என்று சொல்லலாம். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கணவனும், மனைவியும் காரில் வருகிறார்கள். வழியில் ஒரு இளைஞன் லிப்ட் கேட்டு காரில் ஏறிக் கொள்கிறான். ஞாயிற்றுக்கிழமையான அன்று படகுசவாரி செய்து பொழுதை கழிப்பது அந்த தம்பதியின் திட்டம். அவர்கள் அந்த இளைஞனையும் தங்களுடன் படகு சவாரிக்கு அழைக்கிறார்கள். மூவரையும் ஏற்றிக் கொண்டு படகு கிளம்புகிறது.
 
அந்த மூவரில் கணவன் மற்ற இருவரையும் அதிகாரம் செய்கிறவனாக இருக்கிறான். இளைஞனுக்கு அவனது அதிகாரம் பிடிப்பதில்லை. மறுத்துப் பேசி முரண்டு பிடிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் எழும் ஈகோ சண்டையை தீர்க்கிறவளாக அந்த மனைவி இருக்கிறாள்.
 
கணவன் அடிப்படையில் ஒரு கோழை. தனது இயலாமையில் எழும் கோபத்தை அவன் தனது மனைவிமீது அதிகாரமாக செலுத்துகிறான். புதிதாக வந்த இளைஞனுக்கு, ஒரு பெண்ணின் முன்னால் அவமானப்படுவதா என்று ஓர் ஈகோ. அதன் காரணமாகவே அவன் கணவனின் செயலை எதிர்க்கிறான். இந்த ஈகோ யுத்தத்தை மிக நுட்பமாக பொலான்ஸ்கியின் படம் பதிவு செய்கிறது.

 
ஒருகட்டத்தில் கணவனுக்கும், இளைஞனுக்கும் இடையில் ஏற்படும் கைகலப்பில் இளைஞன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான். நீச்சல் தெரியாத அவனை காப்பாற்ற கணவன், மனைவி இருவருமே தண்ணியில் குதிக்கிறார்கள். உண்மையில் இஞைனுக்கு நீச்சல் தெரியும். அவன் ஒரு மிதவையின் பின்னால் ஒளிந்து அவர்களுக்கு போக்கு காட்டுகிறான். படகுக்கு திரும்பும் கணவன், மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. கணவன் மீண்டும் தண்ணியில் குதித்து தேடும் போது இளைஞன் படகுக்கு திரும்புகிறான். அந்த பெண் இளைஞனுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறாள். பிறகு அவனை கரையில் இறக்கிவிட்டு படகுத்துறைக்கு வருகிறாள்.
 
கணவனை பொறுத்தவரை அவனால் ஒருவன் தண்ணியில் மூழ்கி இறந்துவிட்டான். அவனை சீண்டும்விதமாக போலீசுக்கு போகலையா என கேட்கிறாள் மனைவி. கணவனுக்கு தயக்கம். பயந்துவிட்டாயா என்று அவள் கேட்க, முதலில் மறுப்பவன் பிறகு ஆம் என்கிறான். நீ பயந்ததே போதும், அவன் உயிருடன்தான் இருக்கிறான் என்று சொல்லும் மனைவி, அவனுடன் சேர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டதாக சொல்கிறாள். கணவன் இளைஞன் உயிரோடு இருப்பதை நம்ப ப்ரியப்படுகிறான். அதேநேரம், அவனுடன் தனது மனைவி உடலுறவு வைத்ததாகச் சொன்னதை நம்ப அவன் மனம் மறுக்கிறது. இந்த ஊசலாட்டத்துடன் அவர்களின் கார் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் தயங்கி நிற்பதுடன் படம் முடிகிறது.
 
ஒரு பெண்ணை முன்னிறுத்தி, இரு ஆண்களுக்கிடையில் எழும் ஈகோ யுத்தத்தை கலாபூர்வமாக இந்தப் படம் சொல்கிறது. ஈகோ என்பது நீராடியில் கிடக்கும் கொலைவாளைப் போன்றது என்பதை இந்தப் படம் அழுத்தமாக உணர வைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :