திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (12:58 IST)

தடையில்லா மின்சாரத்தை தாருங்கள்..! இலவசத்தை பற்றி பின்னர் பேசுங்கள்..! சீமான்...

Seeman
விவசாயிகளுக்கு முதலில் தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு, இலவசம் பற்றி பின்னர் பேசுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
திருப்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பவானியில் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  அப்போது பேசிய அவர், ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4.5 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்றார்.
 
வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டிற்கு கார் தயாரிக்க வருகின்றன என்றும் நீர் மேலாண்மை திட்டத்தில் சீனா தெளிவாக உள்ளது என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் உள்ளது, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
 
விவசாயிகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் தண்ணீர் பயிரை சென்றடைவதற்குள் மின்சாரம் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார். முதலில் தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு, இலவசம் பற்றி பேசுங்கள் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.
 
மேலும், கெயில் எரிவாயு குழாயை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர்,   சாயக்கழிவுகளை கொட்டி நொய்யல் ஆற்றை கெடுத்துவிட்டதாக  குற்றம்சாட்டினார்.

 
பாஜக செய்த சாதனை என ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா? ஒரு முறையாவது மோடி செய்தியாளர்களை சந்தித்தது உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.  மேலும் மோடி செய்தியாளர்களை சந்தித்தால் போட்டியில் இருந்து விலகுகிறேன் என அவர் கூறினார். ஊழலை ஒழிப்பதாக கூறி தேர்தல் பத்திரங்களில் பாஜக ஊழல் செய்துள்ளது என்று சீமான் கடுமையாக விமர்சித்தார்.