வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (16:37 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் கூடாது...! அரசியல் கட்சிகளுக்கு பறந்த உத்தரவு..!!

Election Commision
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  கொளுத்தும் வெயிலையும் பெருட்படுத்தாமல் மக்களைச் சந்தித்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள் சிலர், தங்களது குழந்தைகளை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையமானது பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
 
அதில், அரசியல் கட்சிகள் சாார்பில் நடைபெறும் பிரச்சாார நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், முழக்கம் எழுப்புவது, சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுர விநியோம் போன்ற தேர்தல் சார்ந்த எந்தப் பணியிலும் குழந்தைைகளைை ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
 
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குழந்தைகளை தங்களது கைகளில் தூக்கி வைத்துக் கொள்வதும், வாகனத்தில் வைத்துக் கொள்வதும் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
 
குழந்தைகளை பாடல் எழுத வைப்பது, பாடல்களை பாட வைப்பது, பேச வைப்பது, அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் படங்களை ஏந்திச் செல்வது, கட்சிகளின் கொள்களை குழந்தைகள் மூலம் வெளியிட வைப்பது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 1986 மற்றும் 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டங்களை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இது தவிர, தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் சார்ந்த எந்தவொரு பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

 
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மாவட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடைமுறைகள் எந்த வகையில் மீறப்பட்டாலும், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.