மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் – ஏன் என்றால் ?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் இந்தியாவில் பாஜகவே ஆட்சியமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த புல்வாமா மற்றும் அதன் எதிர்வினையான பாலகோட் தாக்குதல் ஆகியவற்றை மிகவும் நிதானமாகவும் சரியான வழியிலும் கையாண்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை உலகநாடுகள் பாராட்டின. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியாவில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதற்குக் காரணமாக அவர் சொல்லியிருப்பது ‘ பாஜக ஆட்சியமைத்தால்தான் பாகிஸ்தான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த முன்வரும். இல்லையெனில் காங்கிரஸை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிடாது. இந்தியாவில் முஸ்லிமாக வாழ்ந்தாலே தாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக அங்கு நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்கள் இன்று இந்து தேசியவாதத்தாலும் இந்துத்வா கொள்கைகளாலும் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள மக்கள ஏழ்மை நிலையில் இருந்து விடுபட அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் அமைதியான நல்லுறவைப் பேணுவது நல்லது’ எனத் தெரிவித்தார்.
இம்ரான் கானின் இந்தப்பேச்சு உண்மையில் பாஜக மீதான விமர்சனம்தான் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.