செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (20:06 IST)

மனதின் ஆர்வமும் செயலில் வேகமும்- சிறப்புக் கட்டுரை

kannadasan
இந்த வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். உலகில் என்னென்னவோ நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் அன்றாடமும் நடந்துகொண்டே இருக்கிறது.
 
மாற்றத்தின் படிக்கட்டில் உலகம் ஒவ்வொரு நொடியும் ஏறிக் கொண்டிருகிறது.
 
ஏமாற்றங்களும், எதிர்ப்பார்ப்புகளும் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
 
நேற்றைய வாழ்க்கையே இன்றும் தொடர்ந்து வந்தால் பரவாயில்லை. இனிப் போகப் போக நம்மை மாற்றிக்கொள்ள காலம் ஒரு வாய்ப்பை நல்கும் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
 
ஆனால், ஒரு பத்தாண்டுகளாக நாமே நம்மை மாற்றிக்கொள்ளவும் நம் வாழ்க்கையில் உயர்வைத் தீர் மானிக்கவும், முந்தையை நிலையில் இருந்து ஒரு அடியாவது முன்னேறிச் செல்லமுடியவில்லை எனில் அது நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தீர்க்கமாகக் கூறலாம்.
 
எதுவும் தெரியாமல் பிறக்கிறோம்! வயது வரும்போது ஓரளவு கற்கிறோம். நம் பெற்றோரின் வயதை நாம் அடையும்போது, இன்னும் சிறிது அறிகிறோம். நமக்குப் போதித்தவர்களின் வயதை நாம் கடக்கும் போது, கொஞ்சம் உலகம் அறிந்தவர்களாகிறோம்.
 
இது எதார்த்த வாழ்க்கையின் படிநிலையாகும்.
 
மற்றவர்களுடன் ஒப்பு நோக்கவில்லையென்றாலும் கூட நம்மை நாமே கடந்த காலத்தோடு ஒப்பீடு செய்யும்போதுதான் நாம் எந்தளவும் இருக்கிறோம் என்ற புரிதல் நமக்குள் ஏற்படும்.
 
சமூக வலைதளமான பேஸ்புக்கில்கூட சில ஆண்டுகளுக்கு முன், 10 ஆண்டுகள் சேலஞ்ச் என்ற ஒரு ஹேஸ்டேக் டிரெண்டுங் ஆனது. ஒரு சிலர் தங்களின் உடல் எடையைக் குறைத்திருந்தனர். ஒரு சிலர், தங்களின் வாழ்க்கை அமைப்பை மாற்றியிருந்தனர். ஒரு சிலர் தொழில் ரீதியாக உயர்ந்திருந்தனர். ஒரு சிலர், தங்களின் கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட முடியாமல் அதை இறுகப்பிடித்த படி தொடர்கின்றனர். ஒரு சிலர், முன்னேற்றப் பாதையில் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
 
கட்டுப்பாடற்ற சுந்திரத்தை இன்றைய தலைமுறைக்கு வாய்ப்பளித்துள்ளது. உலகளவில் என்ன நடக்கிறது? எந்த நாட்டில் என்ன ஆடை பேஷன்? எங்கு என்ன உணவு பிரசித்தி பெற்றது? சுற்றுலாவுக்கு உகந்த நாடு? கல்விக்கு உகந்த நாடு? வியாபாரத்திற்கு உகந்த நாடு என பலபல விஷயங்களை வீட்டில் இருந்தபடி செல்போன் மூலம் அறிகின்ற இந்த இணையதள அறிவுக்காலத்தில், யாருக்கும் வாய்ப்பில்லை என்பதை மறுக்கமுடியாது.
 
ஏனென்றால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக்கில் ரூ.1 கோடியில் வேலை, அமெரிக்காவில் பல லட்சங்களில் வேலை என்றால் இமைகொட்டாமல் அந்த வாய்ப்பைப் பெற்றவர்களைப் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கும்.
இப்போது, அப்படியில்லை.
 
எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது.
 
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியில் கொடுக்கக்கூடிய அதே சம்பளத்தை இங்குள்ள ஒரு ஐடி கம்பெனி கொடுக்கிறது.
 
ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிறது. எட்டித்தொட்டால் உலகப்புகழ் பெறும் சந்தர்ப்பங்கள் கண்முன் காத்துக்கிடக்கிறது.
 
உலகம் மாறிவிட்டது. ஆனால், உலகத்திற்கேற்ப நம்மாம் மாறமுடியவில்லை என்றால் அதுதான் தவறு.
 
கண்ணதாசன் மாடர்ன் ஸ்டுடியோவில் எழுத்தாளர் வேலை கேட்டுப்போனபோது, திறமை குறைவானர்கள் அவரை தடுத்து அவரை அங்கிருந்து அகற்றும் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார்கள்.
 
எட்டாம் வகுப்புத்தாண்டான கண்ணதாசன், ஒரு கருத்துவேறுப்பாட்டில் அங்கிருந்து புறப்பட்டு,கோவையிலுள்ள சென்டரட் ஸ்டுடியோவுக்கு வந்தபோதுதான், அவருக்கு முதல்பாட்டு எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. கூடவே கை நிறையப் பணமும் கிடைத்தது.
 
‘’கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே
 
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!’’
 
என்று அவர் எழுதிய வார்த்தைகள் எல்லாம் இந்த உலகத்திற்கு மட்டுமல்ல, தனக்குத்தானே கூறிக்கொண்ட தன்னம்பிக்கை நிறைந்த ஆறுதல்வார்த்தைகள்.
 
அப்பாடலை எழுதிமுடித்த பின், அவருக்கு கதை இலாகாவில் அவர் நேசித்த அவரது காதலர் கலைஞர் கருணா நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது.
 
படித்த அனுபவத்தைக் காகிதப்பக்கங்களில் நிறைத்துத் திரைப் படங்களில் கதை எழுதிப் புகழ்பெற்றதும்; தான் பட்ட அனுபவப் பாடுகளைப் திரைப்பாடல்களில் இறைத்து, அதைக் காவியப் பெட்டகத்தில் சேர்த்ததும் அவரது தீராத முயற்சியின் பெருவிளைவு.
 
இப்படி, ஒரு நாளுக்கும், அடுத்த நாளுக்குமான முயற்சிகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால், அடுத்த சில ஆண்டுகளில் நாம் எடுத்து வைக்கும் அடிகள், அந்த வெற்றிச் சந்திரனில் பதிக்கும் சாதனைப் பயணமாக அமையலாம்.