“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!
Webdunia|
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார். தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார். ‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’ நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி, ‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’ நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன். அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன். ‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார். அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’ ‘‘வணக்கம்.’’ நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார். நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன். மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார். ‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’ ‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’ ‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார். அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன். ‘த்தூ.. இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.நான் அம்மாவை நெருங்கி, ‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன். ‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’ ‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’ ‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள். நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.அம்மாதான்.