புதன், 27 நவம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (05:40 IST)

காவிரிக்காக கன்னடர்களை தாக்குவது முறையா? - பிரச்சனைக்கு யார் காரணம்

”உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”
 
 - இது காவிரியின் பெருமை பேசும் சிலப்பதிகார பாடல்.
 

 
இதன் பொருள் : நீரின் வருகையைக் கண்டு உழவர் மகிழ்ச்சியால் எழுப்பும் ஒலியும், மதகிலே தேக்கி வைக்கப்பட்ட நீர் திறந்ததும் உண்டாகும் ஒலியும், கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஒலியும், புதுப்புனல் விழாக் கொண்டாடும் மகளிரின் ஒலியும், சிறப்பான வகையிலே உண்டாக்கிச் செல்லும் காவிரியே, நீ வாழ்வாயாக! என்பதாகும்.
 
இத்தகைய காவிரி ஆற்று நீரை, பங்கீடு செய்வதில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.
 
காவேரி ஆற்று நீரை தமிழகத்திற்கு தருவதில் கர்நாடகம் தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது என்று தமிழர்களும், தங்களது மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருப்பதால் காவிரி நீரை தமிழகத்திற்கு அளிக்கக்கூடாது என கர்நாடத்தினரும் மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இதனையொட்டி கன்னட வாழ் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழ்நாடு வாழ் கன்னடர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான். ஆனால், அவைகள் பிரச்சனையை நிரந்தர தீர்வுகாண்பதற்கு பதில், இந்த பிரச்சனையை ஒரு சீசன் போல உருவாக்கி வேடிக்கை அரசியல் செய்கின்றனர்.
 
இதுபோன்ற விஷயங்கள் வெறும் தமிழ் உணர்வு அல்லது கன்னட உணர்வு சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல, அம்மாநில விவசாய மக்கள் சம்பந்தமான வாழ்வாதார பிரச்சனை. நாம் கர்நாடகா மாநிலத்திடம் உரிமைக் கோருவது முன்னர் நமது மாநில அரசிடம் உரிமை கோருவதற்கு பல தார்மீக காரணங்கள் உள்ளன. ஆனால், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
 
தூர்வாரப்படாத ஏரிகள்:
 
மழைநீரில் ஒரு பகுதி பெரிய ஏரி, குளங்களிலும் முன்பு சேர்வதுண்டு. ஆயிரக்கணக்கில் அவைகள் தூக்கப்பட்டு இப்போது கட்டடங்களாகவும் குப்பைமேடாகவும் மாறி இருக்கிறது.
 
ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருக்கின்றது. 39,202 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கோயில் குளங்கள் 5000, நூற்றுக்கும் அதிகமான அணைகள் மற்றும் தடுப்பணைகள், 33 ஆறுகள். இவற்றை தூர்வாரினாலே இரண்டு மடங்கு நீராதாரங்களைச் சேமித்து மிச்சப்படுத்தலாம்.
 
இருந்தும் ஏன் இவ்வளவு நீர் தட்டுப்பாடு? ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிப்புரத்தை சுற்றியுள்ள பெரும்பாலான ஏரிகளும், குளங்களும் ரியல் எஸ்டேட் காரர்களால் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. இதற்கு முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியாளர்கள்தான் காரணம்.
 
பெங்களூருவில் நூறு ஆண்டுகள் இடைவெளியில் 1916ஆம் ஆண்டுக்கு பிறகு, கனமழை (256.8 மி.மீ.) கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்துள்ளது. ஆனாலும், நகரத்தை பாதிக்காத வகையில் உடனடியாக நீர் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம் சிறந்த வடிகால் வசதி அமைக்கப்பட்டிருப்பதுதான். ஆனால், நமது சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கி, மூச்சுத் திணறியது.
 
குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் ஆறுகளில் விஷக்கழிவுகளும், ஆலைக்கழிவுகளும் கலந்து வீணாகிறது. காவேரி, வைகை, தாமிரபரணி, சிறுவாணி, பாலாறு ஆகிய ஆறுகள் சாயம், தோல், தொழிற்சாலைக் கழிவுகள் சேர்ந்து எந்த பயன்பாட்டுக்கும் இன்றி வீணே கடலில் கலக்கிறது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பாழாய்போன பாலாறு:
 

 
வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விளைநிலங்களுக்கு, பாசன நீராகவும் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது பாலாறு. பாலாறு ஒரு காலத்தில் தமிழகத்தின் வட மாவட்ட மக்களுக்கான பால் ஆறு.
 
அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் வட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து பால் வார்த்துக் கொண்டிருந்த ஆறு பாலாறு, அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக நீர்வரத்துக் குறைந்து, தற்போது பெருமழை வௌ்ளக்காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிவரும் ஆறாக நீர் வரத்து சிறுத்துப்போனது.
 
அத்தகைய பாலாற்றில் ஆந்திர அரசு அணைக் கட்டு நீர் வரந்தை தடுக்க முயற்சி எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள அதே வேலையில், பாலாற்று மணல் கடந்த பல ஆண்டுகளாக மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்பதும் நிதர்சனமான உண்மை.
 
பாலாறு மட்டுமல்லாமல் மற்றைய தமிழக நதிகளிலும் ஆற்று மணல் அள்ளப்படுவதாலேயே நீர் வரத்துக் குறைந்து, வற்றிப்போய் காணப்படுகிறது. இது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
 
மணல் கொள்ளையால் கொள்ளிடம் ஆறு முழுவதும் தனது மணலை இழந்து, வெறும் களிமண் தரையாகி விட்டது. மணல் கொள்ளையின் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
 

 
இதுதவிர, தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டு எல்லையிலேயே கடலில் கலக்கும் நதி' என தாமிரபரணியை பன்னாட்டு நிறுவனமான கோக-கோலா நிறுவனத்திற்கு குறைந்த விலையில் உறுஞ்சி எடுக்க தமிழக அரசு அனுமதித்தன் காரணமாக இன்று ஆற்றை ஒட்டிய கிராமப் பகுதிகளில்கூட நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
 
தாமிரபரணி ஆற்றில் ஒருநாளைக்கு பல லட்சம் விட்டர் தாமிரபரணி தண்ணீரை தங்கு தடையில்லாமல் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. பவானி நதியில் இருந்தும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் இதே நிறுவனத்துக்குப் போகிறது.
 
இந்த ஒரு கோலா நிறுவனம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 17 இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதையெல்லாம் சரி செய்யாமல், நாம் மொந்தையாக இருந்துவிட்டு அண்டை மாநிலத்துடன் பிரச்சனைக்காக மல்லுக்கு நிற்பது ஏன்?
 
கர்நாடகா அரசும் அண்டை மாநில மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். 1991ஆ, ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் இட்ட இடைக்கால உத்தரவையும், 2007ஆம் ஆண்டு இட்ட இறுதி உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்று, மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
 
ஒரு நதி உற்பத்தியாகி அது இறுதியாக சென்று சேரும் இடம் வரை குறுக்கே எந்த ஒரு நாடும் அணைகள் கட்டிக் கட்டுப்படுத்தக் கூடாது என்று சர்வதேச விதிகளின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும்.

மேலும், இதனை கவுரவ பிரச்சனையாக கருதவோ, அல்லது இனவாதமாகவோ கருதாமல், அப்பாவி தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக கருதி விவசாய நிலங்களை காப்பாற்றும் நோக்கோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தார்மீக ரீதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

’காவிரி நீரை வைத்து விவசாயம் செய்யப்பட்டதை விட அரசியல் செய்யப்பட்டதுதான் அதிகம்’ என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட ஒரு கருத்தை இரு மாநில அரசுகளும் மெய்பித்துவிடக் கூடாது.