செவ்வாய், 4 அக்டோபர் 2022
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Modified வெள்ளி, 22 ஜனவரி 2016 (14:12 IST)

இந்திய வீரர்கள் சுயநலத்துடன் ஆடினார்களா? - மேக்ஸ்வெல் காட்டம்; ஸ்மித் ஆதரவு

இந்திய வீரர்கள் சுயநலத்துடன் ஆடினார்களா? - மேக்ஸ்வெல் காட்டம்; ஸ்மித் ஆதரவு

ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், புதன்கிழமை 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 
இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. ஆரோன் பிஞ்ச் 107 ரன்கள் [107 பந்துகள்], டேவிட் வார்னர் 93 ரன்கள் [92 பந்துகள்] குவித்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 29 பந்துகளில் 51 ரன்களும், மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
 

 
பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில், 37.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. மேற்கொண்டு 75 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தது.
 
அப்போது களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறி தோல்வியை துவக்கி வைத்தார். தொடர்ந்து வந்த வீரர்களில் ஜடேஜா [24] தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
தோல்வி குறித்து கூறிய தோனி, “எனது விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஏனென்றால், அந்த நிலையில், ஆட்டத்தை இனிதாக நிறைவு செய்யும் பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சில விக்கெட்டுகளை இழந்ததும் காரணம்” என்று கூறியிருந்தார்.
 
இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் கூறும்போது, ‘இந்திய வீரர்கள் சுயநலத்துடன் விளையாடினர்’ என்று குறிப்பிட்டார்.
 

 
இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் விராட் கோலி 56 பந்துகளில் 80 ரன்கள் குவித்திருந்தார். ஆனால், சதத்தை நிறைவு செய்யும்பொழுது 84 பந்துகளை சந்தித்திருந்தார். அதாவது, 20 ரன்கள் எடுக்க 28 பந்துகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக கடைசி 11 ரன்கள் 21 பந்துகள் எடுத்துக்கொண்டார். அதாவது இந்த சதம் விராட் கோலியின் 25ஆவது சதம் என்பது முக்கிய அம்சமாகும்.
 
ஆனால், இந்த கருத்தை மறுத்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ”உலகத்திலுள்ள ஓவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் இது இயற்கையானதுதான் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு புதிய மைல்கல்லை எட்டும்பொழுது, உங்களது சிந்தனை கொஞ்சம் மெதுவடையும்.
 
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தரமான வீரர்கள். அவர்கள் அற்புதமாக விளையாடி வருகிறார்கள். அவர்களது ஆட்டத்தில் சுயநலம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
 
ஆனால், அதே சமயம் 3ஆவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய கிளைன் மேக்ஸ்வெல், 83 பந்துகளில் 96 ரன்கள் குவித்திருந்தபோது, அடித்து ஆட முற்பட்டுதான் அவுட் ஆனார்.
 
இது குறித்து கேட்டபோது, ”அவர்கள் ஒருவேளை புதிய மைல்கல்லை உறுதி செய்வதற்காக அவ்வாறு ஆடியிருக்கலாம். சில வீரர்கள் சாதனைக்காக உந்தப்பட்டு இருப்பார்கள். சில வீரர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்” என்று ஸ்மித் கூறியுள்ளார்.