வெள்ளி, 29 மார்ச் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (18:33 IST)

வைகோவிற்கு தோல்வி பயமா? - போட்டியில்லை என அறிவித்ததன் பின்னணி என்ன?

மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்துள்ளார்.
 

 
இதுவரையில் தமிழகம் சந்தித்த சட்டமன்ற தேர்தலை விடவும், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே மிகவும் பரப்பரப்பாகவும் ஆவலாகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
 
அதற்கு முக்கிய காரணம் பலமுனைப் போட்டி என்பதோடும், மூன்றாவது அணியாக மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து தமிழகத்தில் முதன்முதலாக தீவிரமாக ஒன்றிணைந்த மக்கள் நலக் கூட்டணி கடந்த ஆண்டு உதயமானதும், அது சிறிதாக சிறிதாக வலுப்பெறத் தொடங்கியதும் ஆகும்.
 
மேலும், தேமுதிக இணைந்தது இன்னும் அதிக பலம் அடைந்தது. பின்னர் ஜி.கே.வாசன் இணைந்ததும், மற்ற சிறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன இதற்கு மற்றொரு காரணங்கள். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியின் மீது தீவிர தாக்குதலை தொடுத்துள்ளதை வைத்தே அறியலாம்.
 
இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான். மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டாலும், அந்த அணியில் உள்ள கட்சி தலைவர்கள் இரு கட்சியையுமே விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவார் என்று கடந்த 16ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின்போது அறிவிக்கப்பட்டது. வைகோ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. 
 
இதனையடுத்து நேற்று தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற வைகோவுக்கு கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்ற வைகோ திடீரென தான் தேர்தல் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டு தனக்கு பதிலாக மாற்று வேட்பாளரான விநாயக் ரமேஷை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார்.
 
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. வைகோ தோல்வி பயத்தால்தான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார் என்று ஒரு தரப்பினரும், சாதி மோதலை தடுப்பதற்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும் அவரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று ஒரு தரப்பும் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து வைகோ கூறியுள்ளதாவது: சாதிக் கலவரத்தைத் தூண்ட திமுக சதிஎனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக வைத்து, தேவர் - நாயக்கர் சாதிக் கலவரத்தை ஏற்படுத்த திமுக தலைமையைத் தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் ஊக்குவித்ததையும் நான் அறிய நேர்ந்தது.
 
கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன். என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது. இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.