சறுக்கலில் சங்கத் தலைவர்
அடி மேல் அடியாக விழுவதால், செய்வதறியாது கண் கலங்கி நிற்கிறாராம் சங்கத் தலைவர்.
ஒரு சங்கத்தின் செயலாளராகவும், இன்னொரு சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் உயர நடிகர். ‘இளம் கன்று பயமறியாது’ என்பார்கள். நடிகரின் போக்கும் அப்படித்தான் இருக்கிறது. அவராக ஒரு முடிவை எடுத்துவிடுகிறார். அதற்கு சிக்கல் வரும்போது கண்கலங்கி நிற்கிறார்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார். ஆனால், பொதுமக்களுக்குச் சொந்தமான சாலையை அபகரித்துவிட்டதாகக் கூறி, கட்டிடம் கட்ட தடைவிதித்திருக்கிறது நீதிமன்றம். இதேபோலத்தான், ‘நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், மே 30 முதல் அனைத்து சங்கங்களும் காலவரையரையற்ற போராட்டம்’ என அவராகவே அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு, அவர் சங்கத்துக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு. மேலும், மத்திய, மாநில அரசுகள் இவர் கொடுத்த கோரிக்கைகளின் கோப்பைக் கூட பிரித்துப் பார்த்ததா எனத் தெரியவில்லை. இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களின் தலைவர்கள், தாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. மேலும், எங்களைக் கேட்காமல் அவர் இப்படி அறிவித்தது தவறு என்றும் கூறியுள்ளனர். இதனால், செய்வதறியாது தவித்துப்போய் நிற்கிறார் சங்கத் தலைவர்.