செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:16 IST)

கருப்புக் குடிநீர்: பிரபலங்கள் குடிக்கும் தண்ணீரின் சிறப்பு என்ன?

காஜல் அகர்வால் முதல் ஸ்ருதி ஹாசன் வரை குடிக்கும் கருப்புக் தண்ணீரின் சிறப்பு என்ன?

காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், மலாய்கா அரோரா, ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் கருப்புக் குடிநீர் பருகுவதாக செய்திகள் வெளியாகின. 

கருப்புக் குடிநீர் என்றால் என்ன?

கார நீர் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர் கருப்புக் குடிநீர் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது அதிகம் வியர்த்துக் கொட்டிய பிறகு உடலுக்கு மின்பகு பொருட்களை (electrolytes) வழங்குவது போன்ற பயன்கள் இந்தக் குடிநீர் மூலம் கிடைப்பதாக எவிடென்ஸ் பேஸ்ட் காம்ப்ளிமென்டரி அண்ட் ஆல்டெர்னேடிவ் மெடிசன் (இபிசிஏஎம்) எனும் ஆய்விதழ் கூறுகிறது.

எலிகள் மீதான முந்தைய ஆய்வுகள் கார நீர் உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுவதைத் தெரிந்துகொண்டதாக எவிடென்ஸ் பெஸ்ட் காம்ப்ளிமென்டரி அண்ட் ஆல்டெர்னேடிவ் மெடிசன் கூறியது. மேலும் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக விளக்கியது.

மறுபுறம், சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில், இந்தத் தண்ணீரின் பிஎச் அளவு (அமிலம் மற்றும் காரத்தைக் குறிப்பிடும் அளவீடு) ஏழுக்கும் மேல் இருப்பது, தோலின் வயதான தோற்றத்தையும் குறைக்கிறது. இருப்பினும் இபிசிஏஎம் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் தங்கள் ஆய்வில் கிடைக்கவில்லை என்றனர்.

கருப்பு நீரில் உள்ள மூலப்பொருட்கள் என்ன?

நம் உடலின் 70% பகுதி, திரவத்தைக் கொண்டுள்ளது. எனவே, உடலின் அனைத்து பாகங்களும் முழு திறனொடு செயல்படுவதற்குப் போதுமான அளவுக்கு சீராக தண்ணீரை உட்கொள்வது அவசியம்.

மனித உடலிலுள்ள நச்சுத் துகள்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவுகிறது. மறுபுறம், உடலின் வெப்பநிலையை பராபரிப்பதும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு தாதுக்களைக் கொண்டு செல்வதும் உடலிலுள்ள திரவத்தின் பொறுப்பு. உணவுச் செரிமானத்திலும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கருப்புக் குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மேற்கூறிய செயல்முறைகளின் சிறந்த செயல்பாட்டிற்காக கருப்புக் குடிநீரை உற்பத்தி செய்ய 70க்கும் மேற்பட்ட கனிமங்களைச் சேர்ப்பதாகக் கூறுகின்றன. கருப்புக் குடிநீரில் வெளிமம் (மேக்னீசியம்) போன்ற கனிமங்கள் உள்ளன. இருப்பினும், கனிமங்களின் விகிதம் இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.

மொத்தத்தில், கருப்புக் குடிநீர் உயிரியல் செயல்முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது, அமிலத்தன்மையைக் குறைப்பது, நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறது. 

வழக்கமான குடிநீருக்கும் கருப்புக் குடிநீருக்கும் என்ன வேறுபாடு?

"நாம் தினமும் உட்கொள்ளும் குடிநீரில் சில தாதுக்கள் குறைந்த அளவில் உள்ளன. இந்தத் தாதுக்கள் நம் உடலுக்கு மிகவும் அவசியமானவை. சில நேரங்களில் இந்தத் தாதுக்களின் குறைபாடு நோய்களை எற்படுத்தவும் கூடும்," என்றார் உணவியல் வல்லுநர் மருதுதுவர் ரூத் ஜெயசீலா.

"ஆர்.ஓ தண்ணீரில் பிஎச் அளவு குறைவாக உள்ளது. அதில் அமிலங்களின் அளவு அதிகமாக உள்ளது. அதனால், ஆர்.ஒ தண்ணீரைச் செயலாக்குவது சில நேரங்களில் உடலுக்குச் சிக்கலாகிறது. இதன்விளைவாக, சில நேரங்களில் வைட்டமின்களும் ஊட்டச்சத்து ஊக்கிகளைத் தனித்தனி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்புக் குடிநீர் அப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இவற்றைவிட இயற்கையான மாற்றுகள் எப்போது சிறப்பாகச் செயல்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வே ண்டும்," என்று மருத்துவர் ஜெயசீலா கூறினார்.

திரவ உணவின் அமில மற்றும் கார அளவுகள் அவற்றின் பிஎச். அளவீடு மூலம் அறியப்படுகிறது. அவை 0 முதல் 14 வரை அளவிடப்படுகிறது. பிஎச் அளவு 1-ஆக இருந்தால், தண்ணீரில் அதிகளவு அமிலங்கள் உள்ளன என்று அர்த்தம். பிஎச் 7-க்குக் கீழே இருந்தால் அமிலம் என்றும் பி.எச் அளவு 7-க்கு மேலே இருந்தால் காரம் என்றும் கூறப்படுகிறது. பிஎச் அளவு 13 ஆக இருந்தால், திரவத்தில் கார அளவு மிக அதிக விகிதத்தில் இருப்பதாக அர்த்தம்.

பொதுவாக, நாம் குடிக்கும் நீரில் பிஎச் அளவு 6 முதல் 7 வரை தான் இருக்கும். ஆனால், கார நீரின் பிஎச் அளவு 7-ஐ விட அதிகமாக இருக்கும். அதாவது வழக்கமான குடிநீருடன் ஒப்பிடுகையில் கருப்புக் குடிநீர் காரத்தன்மை அதிகம் கொண்டது.

இருப்பினும், அதிக பிஎச் உள்ளதால் கார நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குமெனச் சொல்ல முடியாது. அது நீரிலுள்ள கனிமங்களைப் பொறுத்தது. அதோடு அவை பல்வேறு உடல் பாகங்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதைப் பார்ப்பதும் முக்கியம்," என்று மருத்துவர் ஜெயசீலா கூறினார். 

யாருக்குப் பயனளிக்கும்?

சில உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கார நீர் உதவுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
சான்றாக, பெப்சின் என்ற நொதி நம் வயிற்றிலுள்ள அமிலத்தன்மைக்குப் பொறுப்பாகிறது. அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 8.8-க்கும் அதிகமான பிஎச் அளவுடைய காரத்தன்மை கொண்ட மினரல் வாட்டர் இந்த நொதியை நடுநிலையில் வைக்க உதவுகிறது.

இதேபோல், 2018ஆம் ஆண்டில் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரி பள்ளியுடன் தொடர்புடைய வல்லுநர்களால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கார மின்னாற்பகுப்பு செய்யப்பட்ட (alkaline electrolyzed water) தண்ணீரைப் பருகுவது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது, மலச் சிக்கலைக் குறைக்கிறது.

வழக்கமான குடிநீருடன் ஒப்பிடும்போது, அதிக பிஎச் உள்ள கார நீரைப் பருகுவது நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுமென்று அமெரிக்காவின் தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மேற்கூறிய மூன்று ஆய்வுகளின் மாதிரி அளவு குறைவாக இருந்துள்ளதால், இவற்றின் கண்டுபிடிப்புகளை உறுதிசெய்ய பரந்த ஆய்வு அவசியம் என்று ஹெல்த்லைன் என்ற மருத்துவ ஆய்விதழ் இணையதளத்தின் பகுப்பாய்வு கூறியது. 

கருப்புக் குடிநீரின் விலை என்ன?

எவோகஸ் என்பது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கருப்புக் குடிநீர் நிறுவனம். மலாய்க்கா அரோரா வைத்திருக்கும் கருப்புக் குடிநீர் புட்டி அந்த நிறுவனத்தைச் சேர்ந்தது தான். 500 மில்லி அளவுடைய 6 புட்டிகளின் தொகுப்பு தற்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொரு புட்டி தண்ணீரிலும் 32 மில்லிகிராம் கால்சியம், 21 மில்லிகிராம் வெளிமம், 8 மில்லிகிராம் சோடியம் உள்ளதாக குஜராத்தை சேர்ந்த எவோகஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுற, வைத்யா ரிஷி என்றொரு கருப்புக் குடிநீர் நிறுவனம் உள்ளது. இது தமது புட்டிகளை இணையத்தில் விற்பனை செய்கிறது. 500 மில்லி கொண்ட 6 புட்டிகளின் தொகுப்பு 594 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நடைமுறையில், அரை லிட்டர் கருப்புக் குடிநீர் புட்டி 100 ரூபாய் அல்லது அதிலிருந்து சற்று கூடக் குறைய இருக்கலாம்.