வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (15:44 IST)

ஜியோவை முந்தி கொண்ட ஏர்டெல்! – அதிரடி ஆஃபரோடு வருகிறது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

ஜியோ தனது ஜிகா ஃபைபர் செட் டாப் பாக்ஸை அறிமுகப்படுத்த இருக்கும் சூழலில் அதிரடியாக தனது புதிய ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸை களம் இறக்கியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

மொபைல் இணைய சேவையில் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள நிறுவனம் ஜியோ. குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்த இந்த நிறுவனம் சமீபத்தில் ஜியோ ஜிகாஃபைபர் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. லேண்ட்லைன் சேவையுடன் இணைய வசதியும் கூடிய அதில் ஒரு செட் டாப் பாக்ஸும் தர உள்ளார்கள்.

இதன்மூலம் அளவில்லாத போன் கால்கள் பேச முடியும் என்பது மட்டுமல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் போன்ற அனைத்து சேவைகளையும் செட் ஆப் பாக்ஸ் மூலமாக ட்வியில் பார்த்து கொள்ள முடியும். செட் ஆப் பாக்ஸ் இணைய வசதியுடன் வருவதால் யூடியூப் வீடியோக்கள் முதற்கொண்ட அனைத்து வசதிகளையும் அதில் பெறலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் தனது சேவையை ஜியோ ஜிகாஃபைபர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக களம் இறங்கியிருக்கிறது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்.

ஜியோவினால் அறிவிக்கப்படாத வசதிகளையும் கொண்டிருக்கிறது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம். அனைத்து விதமான சாட்டிலைட் சேனல்கள், மொழிரீதியான சேனல்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், டிவி தொடர்கள், லட்சத்திற்கும் அதிகமான பாடல்களை விரும்பியபோது பார்க்க முடியும். மேலும் பிரபலமான நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பிற சேவைகளையும் இதன் மூலம் பெற முடியும்.

இந்த வசதிகளை செட் ஆப் பாக்ஸ் மூலமாக டிவிக்களில் பெறலாம், மேலும் இணைப்பு எண்ணை பயன்படுத்தி கணினி மற்றும் மொபைல்களிலும் ஒரே நேரத்தில் இந்த சேவையை பெறலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஒரு வருட சந்தாவோடு 3999 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர்டெல் டிஜிட்டல் டிவி உபயோகிப்பவர்கள் 2,250 ரூபாய் மட்டும் செலுத்தி ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸை பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்களில் அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், யூட்யூப், ஏர்டெல் டிவிகளுக்கான அப்ளிகேசன்கள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட உள்ளன. இந்த பாக்ஸோடு வழங்கப்படும் ரிமோட் வைஃபை மற்றும் ப்ளூடூத்தில் பாக்ஸோடு இணைப்பில் இருக்கும். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற அப்ளிகேசன்களுக்கான தனி பொத்தானும் அதில் அமைக்கப்பட்டிருகிறது. ரிமோட்டில் குரல் கமெண்டிற்கான ஆப்சன் இருப்பதால் தேட வேண்டிய சொற்களை சொன்னால் அவை தானாகவே பூர்த்தி செய்து கொள்ளும்.

ஏர்டெல் தனது எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. தொலைத்தொடர்பு சேவையில் இதுவரை போட்டியிட்டு கொண்டிருந்த ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைகளிலும் தனது மோதலை தொடங்கியிருக்கின்றன.